அறுகம் குடாவில் இஸ்ரேல் பிரஜைகள் மீது திட்டமிட்ட தாக்குதல் அச்சுறுத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரிடமும் மேலும் விசாரணை நடத்தப்படவுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவுகளின் கீழ் சந்தேகநபர்கள் மூவரிடமும் விசாரணை நடத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் DIG நிஹால் தல்துவ தெரிவித்தார். பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் (TID) சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மூவரும் அவ்வப்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த கைதுகளின் மூலம் அறுகம் குடாவைத் தவிர நாட்டில் உள்ள பிரபலமான சுற்றுலாப் பகுதிகளிலும் அதிக பாதுகாப்பு தேவை என்பது தெரியவந்ததாகவும் தல்துவ கூறினார்.
அமெரிக்க தூதரகம் நாட்டிலுள்ள பிரஜைகளுக்கான பயண ஆலோசனையை வழங்குவதற்கு முந்தின நாள் இரவு முதல் பொத்துவில் பகுதியில் பொலிஸார் விசேட பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
பொலிஸ், விசேட அதிரடிப்படை, புலனாய்வுப் பிரிவினர் மற்றும் இராணுவத்தினர் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டதோடு, கடற்படையினரும் கடற்பரப்பில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். “நாட்டிலுள்ள அமெரிக்க பிரஜைகள் அறுகம் குடாவிற்கு பயணிக்க வேண்டாம் என்று அமெரிக்க தூதரகம் பயண ஆலோசனையை மட்டுமே அறிவித்துள்ளது, அதைத் தவிர, அமெரிக்க குடிமக்கள் இலங்கைக்கு செல்ல வேண்டாம் என்று அவர்கள் எந்த எச்சரிக்கையும் வெளியிடவில்லை” என்று தல்துவ கூறினார். அறுகம் குடாவில் இஸ்ரேலிய பிரஜைகள் மீதான திட்டமிட்ட தாக்குதல் தொடர்பில் கிடைத்த புலனாய்வுத் தகவலின் தன்மையின்படி, இது ஒரு பயங்கரவாதச் செயலாக இதுவரை பாதுகாப்பு அதிகாரிகள் அவதானிக்கவில்லை. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக இலங்கையில் மாத்திரமன்றி உலகில் வேறு எங்கும் இஸ்ரேலியர்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு புலனாய்வுத் தகவல்களின்படி, இஸ்ரேலிய பிரஜைகளைத் தவிர வேறு எந்த நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டினரையோ அல்லது உள்ளூர்வாசிகளையோ குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்படவில்லை என்பது தெளிவாகத் தெரியவந்துள்ளது. வெளிநாட்டு புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் ஆரம்பத்தில் இருந்தே தாக்குதல் மற்றும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு, திட்டமிட்ட தாக்குதல் குறித்து சில உறுதிப்படுத்தல்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் விளைவாக, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இலங்கையர்களான மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை செய்ததில், துல்லியமான தகவல்கள் வெளியாகியுள்ளதாக தல்துவ மேலும் தெரிவித்தார்.




