கொழும்பு ஹில்டன் வாகனத் தரிப்பிடத்தில் கண்டெடுக்கப்பட்ட பதிவு செய்யப்படாத BMW கார் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வருமாறு கோரியபோதிலும் அவர் இன்னும் வரவில்லை என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) தெரிவித்துள்ளது.
குறித்த கார் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வருமாறு முன்னாள் எம்.பிக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் உடல்நிலை சரியில்லை எனக் கூறி ஆஜராகாமல் தவிர்த்துள்ளார்.
இதன்படி, கடந்த மூன்று நாட்களாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் பல புலனாய்வுக் குழுக்கள் அவரைத் தேடிய போதிலும், அவர் வசிக்கும் மற்றும் வருகை தரும் அனைத்து இடங்களையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சோதனையிட்ட போதிலும், நேற்று (17) வரை எவ்விதத் தகவலும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோதமான முறையில் அசெம்பிள் செய்யப்பட்ட சொகுசு காரை பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரிடம் வாக்குமூலம் பெறப்பட உள்ளது.