கடந்த காலங்களில் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்த போதிலும், சில துறைகளில் முன்னேற்றம் காணப்படவில்லை என மல்வத்தை பீடத்தின் பிரதான பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல மகாநாயக்க தேரர் கவலை தெரிவித்துள்ளார்.
புத்தசாசன அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன நேற்று சனிக்கிழமை (12) நேரில் சந்தித்துப் பேசும் போதே பிரதம தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவதற்கான புதிய அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு பாராட்டு தெரிவித்தார். எல்லா வகையிலும் இது ஒரு நல்ல நடவடிக்கை என்று அவர் குறிப்பிட்டார்.
“புதிய அரசாங்கம் அதிக எண்ணிக்கையில் அமைச்சர்களை நியமிக்க மாட்டோம் என்று அறிவித்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. வெறும் மூன்று அமைச்சர்களுடன் இந்த அரசு செயல்பட்டு வருவது பாராட்டத்தக்கது. கடந்த காலங்களில் நூற்றுக்கணக்கான அமைச்சர்கள் பதவி வகித்த போதிலும், சில பகுதிகளில் பணிகள் நடைபெறவில்லை. பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. விகாரை தேவலகம் கட்டளைச் சட்டத்தில் உள்ள பல சரத்துக்களுக்கு திருத்தங்கள் தேவை, அது எவ்வாறு சீர்திருத்தப்பட வேண்டும் என்பதற்கான எங்கள் முன்மொழிவுகளுடன் ஒரு ஆவணத்தை நாங்கள் தயாரித்துள்ளோம். இந்த அமைச்சினால் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம். இருப்பினும், மூன்று அமைச்சர்கள் மட்டுமே நாட்டை நிர்வகிப்பதால், எல்லாவற்றையும் நிவர்த்தி செய்வது கடினம்“ என்றார்.
மகாநாயக்கர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆரியரத்ன சில வதந்திகளுக்கு தெளிவுபடுத்தினார். அவர் குறிப்பிடுகையில், “எதிர்வரும் அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் போது அரசியலமைப்பின் ஒன்பதாவது உறுப்புரை நீக்கப்படும் என தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. ஜனாதிபதியோ அல்லது சம்பந்தப்பட்ட அமைச்சர்களோ அவ்வாறான கருத்தை வெளியிடவில்லை. ஒன்பதாவது உறுப்புரையில், பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும், மற்ற மதங்களை சமமாக நடத்த வேண்டும் என்று தெளிவாக கூறுகிறது. எங்கள் அறிவைப் பொறுத்தவரை, இந்த சட்டத்தில் எந்த மாற்றமும் இருக்காது, நாங்கள் எதையும் எதிர்பார்க்க மாட்டோம். எங்களுடன் பணிபுரியும் பௌத்தம் அல்லாத அறிஞர்களும் கூட இந்ம சட்டத்தை திருத்தப்படக் கூடாது என வலியுறுத்தியுள்ளனர். ஒரு பௌத்தன் என்ற முறையில் நானும் அதே எதிர்பார்ப்புகளைப் பகிர்ந்து கொள்கிறேன். எவ்வாறாயினும், நான் அரசியலமைப்பை உருவாக்குபவர் அல்ல, அரசாங்க அதிகாரி, எனவே எதிர்வரும் அரசியலமைப்பு சீர்திருத்தங்களின் போது என்ன நடக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
விகாரை தேவாலயம் கட்டளைச் சட்டம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஏற்கனவே இந்த கட்டளை திருத்தம் செய்யப்பட்டு சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரதம பீடாதிபதிகளிடம் கையளிக்கப்பட்ட வரைவு எமக்கு கிடைத்துள்ளது. அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் அடிப்படையில் அடுத்த கட்ட திருத்தங்களை மேற்கொள்ள எதிர்பார்க்கிறோம்” என்றார்.