தொழில்முறை டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் ரஃபேல் நடால். அடுத்த மாதம் நடைபெறும் டேவிஸ் கோப்பை தொடருடன் ஓய்வு பெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
38 வயதான ரஃபேல் நடால், இதுவரை ஆடவர் ஒற்றையர் பிரிவில் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அதில் 14 பட்டங்கள் பிரெஞ்சு ஓபன் தொடரில் வென்றதாகும். சுமார் 20+ ஆண்டு காலம் களிமண் களத்தில் தனது ஆட்டத்தின் மூலம் ஆதிக்கம் செலுத்தியவர். கடைசியாக கடந்த 2022இல் பிரெஞ்சு ஓபன் பட்டம் வென்றிருந்தார்.
இந்த சூழலில் எதிர்வரும் டேவிஸ் கோப்பை தொடருடன் அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “நான் தொழில்முறை டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த பயணம் மிக கடுமையாக இருந்தது என்று நடால் கூறினார்.
“கடந்த சில வருடங்கள், குறிப்பாக கடந்த இரண்டு வருடங்கள் கடினமாக இருந்தன. வரம்புகள் இல்லாமல் என்னால் விளையாட முடிந்தது என்று நான் நினைக்கவில்லை. சில எல்லைகளுக்கு உட்பட்டு நான் விளையாட வேண்டி உள்ளது” என தெரிவித்துள்ளார்.
அவருக்கு ரோஜர் பெடரர், ஜோகோவிச் உட்பட பலரும் பிரியாவிடை அளித்து வருகின்றனர். ஒலிம்பிக்கில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றுள்ளார்.