ஐக்கிய குடியரசு முன்னணிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐக்கிய மக்கள் சக்தியால் ஒருதலைப்பட்சமாக மீறப்பட்டுள்ளதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமது கட்சியின் உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் கூட்டணி அல்லது வேறு எந்தக் கட்சியுடனோ அல்லது தனித்தோ போட்டியிட மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைமையகத்தில் நேற்று முன்தினம் (10ஆம் திகதி) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பேசிய பாட்டலி சம்பிக்க ரணவக்க;
“எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியிலிருந்து பல மாவட்டங்களில் போட்டியிடுவோம் என்ற எதிர்பார்ப்புடன் நாங்கள் பணியாற்றினோம். அதற்காக, கடந்த ஓகஸ்ட் மாதம் பதினான்காம் திகதி ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் நமது ஐக்கிய குடியரசு முன்னணி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அடிப்படையாக கொண்டோம். அந்த ஒப்பந்தத்தின்படி பதினொரு மாவட்டங்களுக்கு வேட்பாளர்களை முன்னிறுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் செயல்பட்டோம். ஆனால், கடந்த சில நாட்களாக வேட்புமனுத் தாக்கல் செய்ததைப் பார்த்தபோது, எம்மால் நியாயப்படுத்த முடியாத அளவுக்கு மிகத் தீவிரமான முறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மீறப்பட்டிருப்பதை உணர்ந்தோம். அதனால் தான் இந்த தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து விலகுவோம் என்று நினைத்தோம். ஐக்கிய மக்கள் சக்தியை எந்த வகையிலும் பகைமைப்படுத்தவோ அல்லது ஏனைய கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடவோ நாங்கள் உத்தேசிக்கவில்லை. இது குறித்து எமது கட்சியின் ஏனைய உறுப்பினர்களுடனும் ஏனைய அமைப்புகளுடனும் கலந்துரையாடி எதிர்காலம் குறித்து முடிவெடுப்போம். தற்போது, இந்த தேர்தல் நடைமுறையில் இருந்து, தேர்தலுக்கு வேட்பாளர்களை முன்வைப்பதில் இருந்து விலகி இருக்கிறோம். ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தி தலைவர்களுக்கு எழுத்து மூலம் தெரிவித்துள்ளோம். எமது கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடி கட்சியின் உப அமைப்புகளுடன் கலந்துரையாடி எதிர்காலத்தில் எமது வழியை வெளிப்படுத்துவோம் என்றார்.