Pagetamil
தமிழ் சங்கதி முக்கியச் செய்திகள்

‘சஜித்துடன் கூட்டணி வைத்தவருடன் கூட்டு வைக்க மாட்டோம்’: முரட்டு தேசியவாதிகளாக மாறிய ரெலோ!

பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. கட்சிகள் ஒற்றுமை, கூட்டணி பற்றி தீவிரமாக பேசத் தொடங்கி விட்டன. தேர்தலையொட்டி நடக்கும் சுவாரஸ்யங்களுக்கும் இனி பஞ்சமிருக்காது. அவற்றை இனிமேல் வாசகர்களும் அறிந்து கொள்ளலாம்.

தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொருவருமே வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன்தான் களமிறங்குவார்கள். ஒவ்வொரு வேட்பாளரை சுற்றியும் ஒரு கூட்டம் கூடிவிடும். அந்த வேட்பாளருக்கு வெற்றி உறுதியென நம்பவைத்து, தேர்தல் காலத்தில் இலவச உணவு, பானம் என வாழ்க்கையை ஓட்டும் அந்த குழு தேர்தல் முடிவு வரும் போது, வேட்பாளரை விட்டு கலைந்து சென்றுவிடுவார்கள்.

இது தவறாத தேர்தல்கால நிகழ்வு.

வெறும் 100 வாக்கு எடுப்பவர்களும், தமக்கு தேர்தல் வெற்றி நிச்சயம் என நம்புவார்கள். தமது தரப்பில் புதிதாக வரும் வேட்பாளர், தனது வெற்றிக்கு ஆப்படிக்க வந்தவர் என நினைத்து, அந்த வேட்பாளருடன் மல்லுக்கட்டுவார்கள்.

ஒவ்வொரு தேர்தலிலும் நடக்கும் இந்த சுவாரஸ்ய சம்பவம் தற்போது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் நடந்து வருகிறது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் நடக்கும் இந்த வகை குழப்பத்தை புரிந்து கொள்ள- சுருக்கமாக பின்னணி தகவலை குறிப்பிட்டு விடுகிறோம்.

கிளிநொச்சியில் தனக்கான ஆதரவு தளத்தை கட்டியெழுப்பியபடி மு.சந்திரகுமார் தலைமையிலான சமத்துவக்கட்சி வளர்ந்து வருகிறது. அண்மைய காலங்களில், சமத்துவ கட்சி நடத்தும் கூட்டங்களில் அரங்கு நிறைந்த மக்கள் வருகிறார்கள். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள எந்த கட்சிக்கும் அந்த வல்லமையில்லை. அந்த கூட்டமைப்பிலுள்ள கட்சிகள் அனைத்தும் இணைந்தால் கூட, இந்தளவு மக்களை திரட்டி கூட்டத்தை நடத்த முடியாது.

ஆனாலும், சங்கு சின்னத்தில் போட்டியிடும் தமது கூட்டமைப்புக்குள் மு.சந்திரகுமார் தலைமையிலான சமத்துவக்கட்சியை இணைக்க அந்த கூட்டமைப்பிலுள்ள பெரும்பாலான கட்சிகள் மறுத்துள்ளன.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள், சமத்துவ கட்சியையும் இணைக்க வேண்டுமென த.சித்தார்த்தன் முயற்சி மேற்கொண்டுள்ளார். அவர் கூட்டணியிலுள்ள ஏனைய கட்சிகளின் தலைவர்களிடம் இந்த யோசனையை முன்வைத்துள்ளார். அப்போது அனைத்து கட்சிகளும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள கட்சிகள் கூடி, இந்த விவகாரத்தை ஆராய்ந்துள்ளனர். கடந்த 3 வாரங்களின் முன்னர் இந்த சந்திப்பு நடந்தது.

இதன்போது, சமத்துவக்கட்சியை இணைக்கும் யோசனையை த.சித்தார்த்தன் முன்வைத்துள்ளார்.

அப்போது, ரெலோ திடீரென பொங்கியெழுந்து, திடீர் தேசியவாதிகளாகியுள்ளனர்.

அதாவது, கடந்த ஜனாதிபதி தேர்தலில் மு.சந்திரகுமார், சஜித் பிரேமதாசவை ஆதரித்தாராம், தென்னிலங்கை கட்சியை ஆதரித்தவரை எப்படி நாம் சேர்க்க முடியும் என பொங்கியெழுந்துள்ளது ரெலோ.

இதை கேட்டவர்களுக்கு உச்சியில் அடித்த அதிர்ச்சி.

ரெலோ எப்படி இப்படி தூய தேசியவாதிகளானார்கள், ஜனாதிபதி தேர்தலில் சஜித்துடன் கூட்டணி வைத்தவரையே இணைக்கமட்டோம் என்றால், ரெலோக்காரர்கள் எவ்வளவு பெரிய அக்மார்க் தேசியவாதிகளாக இருப்பார்கள் என நீங்கள் நினைப்பது நமக்கும் புரிகிறது.

ஆனால், கூட்டத்தில் கலந்துகொண்ட யாரும் அதை கேட்கவில்லை. அப்படி கேட்கவும் மாட்டார்கள் என்ற துணிவில் ரெலோ, தமிழ் தேசிய சன்னதமாடியுள்ளது.

ரெலோவின் சன்னதம், அப்படியே படிப்படியாக ஈ.பி.ஆர்.எல்.எவ் இலும் பற்றியுள்ளது.

இறுதியில், நிலைமையை சமாளிக்கிறேன் என சிறிகாந்தா தலையிட்டு, “கூட்டமைப்பின் ஒற்றுமையை கருத்தில் கொண்டு சமத்துவ கட்சியை இணைக்கும் யோசனையை கைவிடுவோம்“ என்றுள்ளார். வேறு வழியின்ற புளொட் தரப்பும் அதை கைவிட்டுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பில், கடந்த முறை யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்புரிமையை கொண்டிருந்தது புளொட் மட்டுமே. பா.கஜதீபன் வெற்றிபெறாவிட்டலும், வெற்றிக்கு நெருக்கமான வாக்கை கொண்டிருந்தார். புளொட் அமைப்பு தேர்தல் சூத்திரத்தை சரியாக போட்டால், இப்போது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு என சேர்ந்துள்ள தரப்புக்களை தவிர்த்து விட்டு, சமத்துவக்கட்சியுடன் கூட்டணி அமைத்து, சரியான முறையில் வேட்பாளர்களை களமிறக்கினால், 2 ஆசனங்கள் வரை வெற்றிபெறும் வாய்ப்புள்ளது.

மறுவளமாக, தற்போதுள்ள கூட்டணியில்- அதன் தலைவர்களையும், பிரமுகர்களையும் வேட்பாளராக களமிறக்கினால்- யாழ்ப்பாணத்தில் ஒரு ஆசனத்தையேனும் கைப்பற்றுவது நிச்சயமற்றது.

நாம் ஆரம்பத்திலேயே குறிப்பிட்ட விடயம் இந்த இடத்தில் பொருந்தி வரும். தேர்தலில் போட்டியிடும் அனைவருமே, தாம் நிச்சயமாக வெற்றிபெறுவோம் என நூறு வீதம் நம்பியே களமிறங்குவார்கள். ரெலோ திடீர் தமிழ் தேசிய வேடம் போட்டதற்கும் இதுதான் காரணம்.

அந்த அமைப்பின் யாழ்ப்பாண பிரமுகர் ஒருவர்- தானும் நிச்சயம் வெற்றிபெறுவேன் என நம்புகிறார். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 2 ஆசனங்கள் கிடைத்தால், 2வது ஆசனம் தனக்கு கிடைக்குமென நம்புகிறார். சந்திரகுமார் கூட்டணிக்குள் வந்தால், அந்த 2வது ஆசனம் அவருக்கு சென்றுவிடுமென்பதால், சந்திரகுமாரை கூட்டணிக்குள் இணைப்பதற்கு ரெலோ முட்டுக்கட்டையிட்டுள்ளது என்பதே உண்மை.

இதை பகிரங்கமாக சொல்ல முடியாதே- அதனால்தான், ஜனாதிபதி தேர்தலில் சந்திரகுமார் சஜித்தை ஆதரித்தார் என்ற விபரீத காரணத்தை ரெலோ கூறியுள்ளது.

இம்முறை நாடாளுமன்ற தேர்தலில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு யாழ் மாவட்டத்தில் கரைசேர்வது மிகச்சவாலானதாகவே இருக்கும். கடந்த உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்த போது, சில பகுதிகளில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்புமனு பலமாக இருந்தது. சில பகுதிகளில் மிகப்பலவீனமாக இருந்தது. குறிப்பாக, யாழ் மாநகரசபை உள்ளிட்ட சில பகுதிகள் மிகமிக பலவீனமாக இருந்தது. அதற்கு காரணம், பங்காளிக்கட்சிகள் அனைத்துக்கும் ஓரளவு சமமமாக ஆசனம் பங்கீடு செய்ய வேண்டுமென்ற நிலைமை காரணமாகவே.

தேர்தல் ஆசனப்பங்கீட்டில் இலங்கை தமிழ் அரசு கட்சி தான்தோன்றித்தனமாக செயற்படுகிறது என பங்காளிகள் முன்னர் முறையிட்டு வந்தனர். தமிழ் அரசு கட்சி செயற்பட்ட விதம் சரியானதுதான் என்பதை இப்பொழுது உணர்கிறோம் என, உள்ளூராட்சிசபை தேர்தல் சமயத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர்கள் சிலர் வெளிப்படையாகவே உள்ளக கலந்துரையாடல்களில் குறிப்பிட்டிருந்தனர்.

ஜனநாயக போராளிகள், தமிழ் தேசிய கட்சி என்பன அந்த கூட்டமைப்பில் மிக பலவீனமானவை. ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பும் பெரும்பாலான பகுதிகளில் வலையமைப்பை இழந்து பலவீனப்பட்டுள்ளது. (அந்த கூட்டணியில் எந்த கட்சியுமே அனைத்து பகுதிகளிலும் கட்டமைப்பை கொண்டவையல்ல. மாறாக, சில பகுதிகளின் செல்வாக்கு காரணமாக நாடாளுமன்ற உறுப்புரிமை பெறும் நிலையில் ரெலோ, புளொட் என்பன உள்ளன)

உள்ளூராட்சி தேர்தலில், கிளிநொச்சியின் சில பகுதிகளின் வேட்புமனு தாக்கல் செய்யும் பொறுப்பு ஜனநாயக போராளிகள் கட்சிக்கு வழங்கப்பட்டது. அவர்களால் வெறும் 12 பேரின் பெயரை கூட சேர்க்க முடியவில்லை. சம பங்கு வழங்க வேண்டுமென்பதால், ஒரு கட்சி பலமாக உள்ள பகுதிகளிலும், பலவீனமான தரப்புக்கு கணிசமான ஆசனம் வழங்கப்பட்டது.

அந்த கூட்டணியிலுள்ள பெரும்பாலான கட்சிகளின் தலைவர்கள் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்து, அரசியல் அஸ்தமனத்தை எதிர்கொள்பவர்கள். இந்த தேர்தலை கடைசி வாய்ப்பாக கொண்டு, முயற்சிப்பார்கள். அதனால், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண வேட்புமனு பெரும் கண்றாவியாக இருக்குமென்பது மட்டும் நிச்சயம்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு புத்திசாலித்தனமாக செயற்பட்டால், அரசியல் எதிர்காலம் இருக்கும். இல்லையேல் இருக்கவே இருக்கிறது- யாழ்ப்பாண ஊடக மையம்.

 

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘போரால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நீதி வழங்கப்படவில்லை’: ஏற்றுக்கொண்டார் ரணில்!

Pagetamil

3 கட்சிகளாக அல்ல; சங்கு கூட்டணியாக பேச்சு நடத்த தயார்: தமிழரசுக்கு பதில்!

Pagetamil

இன்று வழக்கம் போல எரிபொருள் விநியோகம்!

Pagetamil

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

நீண்ட வரிசைகள்: எரிபொருள் தட்டுப்பாடு இல்லையென்கிறது பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

Pagetamil

Leave a Comment