எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் கூட்டாக போட்டியிடுவது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், இலங்கை தமிழ் அரசு கட்சிக்குமிடையில் நேற்று உத்தியோகப்பற்றற்ற முறையில் பேச்சு நடந்தது. எனினும், இதில் குறிப்பிடும்படியான எந்த முடிவும் எட்டப்படவில்லை.
நேற்று (30) கொழும்பில் இந்த சந்திப்பு நடந்தது.
கொழும்பிலுள்ள இந்திய தூதர், தமிழ் கட்சிகளை அழைத்து கலந்துரையாடல் நடத்தியிருந்தார். அந்த சந்திப்பின் பின்னர் இரு தரப்பும் கலந்துரையாடலில் ஈடுபட்டன.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தரப்பில் த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் மாவை சேனதிராசா, சி.சிறிதரன், பா.சத்தியலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த சந்திப்பின் போது, எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஓரணியாக போட்டியிடுவது குறித்து ஆராயப்பட்டது.
தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் பெற்றுள்ளதால் இனிமேல் ஓரணியாக இணைந்து போட்டியிடுவதில் சிரமம் ஏற்படுமென தமிழ் அரசு கட்சியினால் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் கட்சிக்குள் பேசிவிட்டு தகவலளிப்பதாக இலங்கை தமிழ் அரசு கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக, அந்த சந்திப்பில் கலந்து கொண்ட தமிழ் அரசு கட்சி பிரமுகர் ஒருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.
திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் நோக்கத்துடன், அந்த இரண்டு மாவட்டங்களில் இரு தரப்பும் ஓரணியாக இணைந்து, வேட்பாளர்களை களமிறக்கலாமா என்றும் ஆராயப்பட்டது. இது தொடர்பிலும் கட்சிக்குள் பேசிவிட்டு தகவலளிப்பதாக தமிழ் அரசு கட்சியினர் குறிப்பிட்டுள்ளனர்.