திருகோணமலையில் காட்டுமிராண்டித்தனமாக சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவரை தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இது தொடர்பில் தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் தாக்கப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முறைப்பாடு பதிவு செய்யப்பட்டபோது குறித்த முறைப்பாடை ஏற்க மறுத்ததாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் குற்றம் சுமத்தியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது-
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக திருகோணமலை ரோட்டவெவ பிரதேசத்தை சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவர் தொடர்ச்சியாக பிரதேசத்தில் இடம் பெறும் போதை வியாபாரம் மற்றும் குறித்த போதை வியாபாரத்திற்கு துணை போகும் அதிகாரிகள் தொடர்பில் பகிரங்கமாக ஊடகங்களுக்கு பல செய்திகளை வெளியிட்டு வந்த நிலையில் போதை மாத்திரை விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து தற்போது பிணையில் வந்துள்ளார். அவர் மீது சோடிக்கப்பட்ட வழக்கு தாக்கல் செய்யப்பட்டது, பொலிசாரின் திட்டமிட்ட நாடகம் என ஊடகவியலாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
குறித்த ஊடகவியலாளர் அன்றைய தினம் கைது செய்யப்படும் போது பொலிசார் முன்னிலையில் பல காட்டுமிராண்டிகள் மிருகத்தனமாக தாக்கிய வீடியோ காணொளி தற்போது வெளிவந்துள்ளது.
இது இவ்வாறு இருக்கையில், பிணையில் விடுதலையானதும் தன்னை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய சந்தேக நபர்களுக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்ய குறித்த ஊடகவியலாளர் மொறவேவ பொலிஸ் நிலையத்திற்கு சென்றபோது குறித்த முறைப்பாடு தொடர்பாக முறைப்பாடு பதிவு செய்ய முடியாது போதிய ஆதாரம் வேண்டுமென முறைப்பாடு நிராகரிக்கப்பட்டதுடன் குறித்த ஊடகவியலாளர் புறக்கணிக்கப்பட்டிருந்தார்.
தற்போது, வீடியோ வெளியானதையடுத்து இந்த ஆதாரத்துடன் சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்ய ஊடகவியலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஊடகவியலாளரை தாக்கும் குழுவில் உள்ள ஒருவர் அண்மையில் வீதியில் சென்ற ஒருவரின் தங்க நகையை திருடிக் கொண்டு ஓடிய போது சிக்கி, சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.