ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு கிடைத்த ஆணையை அமுல்படுத்துவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் திரு வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
பிடகோட்டே, சிறிகொத்தவில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வஜிர அபேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த வஜிர அபேவர்தன மேலும் கூறியதாவது:
திரு.ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டத்தை விட திரு.அனுரகுமார திஸாநாயக்கவின் வேலைத்திட்டத்தின் மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளதால், மீண்டும் வரிசையில் நிற்கும் யுகம் ஏற்படாத வகையில் தற்போதைய ஜனாதிபதி செயற்பட வேண்டும். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய திரு.ரணில் விக்கிரமசிங்கவுக்கு பல்வேறு அரசியல் கருத்துக்களைக் கொண்ட குழுக்கள் தமது வாக்குகளைப் பயன்படுத்தினர்.
தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு 42% ஆணை வழங்கியதன் மூலம் இலங்கை பொது மக்களால் பெரும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அந்தப் பொறுப்பை நிறைவேற்ற ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.