-கருணாகரன்-
சில வாரங்களுக்கு முன் தமிழ்ச்சமூகத்தில் மிகப்பெரிய கவனத்தை உருவாக்கினார் மருத்துவர் அருச்சுனா. ஒரே நாளில் கதாதாயகனாக உயர்ந்தார்.
அப்படிக் கதாநாயகனாகத் தெரிந்தவர், இப்போது ஒரு பெரிய கோமாளி போலாகிவிட்டார். காரணம், அவரே உருவாக்கிய ஒளி வட்டத்தை அவரே சிதைத்தார்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரிப் பேசி, இறுதியில் மணித்தியாலத்துக்கு மணித்தியாலம் மாறிமாறிக் கதைக்கத் தொடங்கினால் யார்தான் அதைக் கேட்பார்கள்? யார்தான் அதை மதிப்பார்கள்? என்பதால் அருச்சுனா என்ன சொன்னாலும் அதைத் திரும்பிப் பார்க்காத சூழல் உருவாகி விட்டது.
இப்போது இதேமாதிரியாகியுள்ளது தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவின் நிலைப்பாடுகளும் செயற்பாடுகளும்.
சணம் வாதம், சணம் பித்தம் என்று சொல்வார்கள் அல்லவா, அதைப்போலவே மாவையின் பேச்சுகளும் அறிக்கைகளும் அவருடைய சந்திப்புகளும், தேர்தல் பரப்புரைகளும் இருக்கின்றன.
சில நாட்களுக்கு முன் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக தமிழரசுக் கட்சி முடிவெடுத்தது. அந்த முடிவைப் பகிரங்கப்படுத்தினார் கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன்.
மட்டுமல்ல, கட்சியின் கொள்கை, தீர்மானம், ஒழுங்கு போன்றவற்றை மதிக்காமல் பொதுவேட்பாளராக போட்டியிடும் அரியநேத்திரன் அதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும் என மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இது நடந்து சில நாட்களில் ரணில் விக்கிரமசிங்கவைத் தன்னுடைய வீட்டுக்கு அழைத்து அவருக்குத் தன்னுடைய ஆதரவைத் தெரிவித்தார் மாவை.
அதோடு நிற்கவில்லை அவர். இரண்டு நாளில் திடீரெனத் தமிழ்ப் பொது வேட்பாளரைச் சந்தித்து வாழ்த்தினார்.
இது நடந்து இரண்டு நாளில் – இன்று 16.09.2024. காலை வவுனியாவில் தமிழரசுக் கட்சியின் ஐவர் அணி கூடி, சஜித்தை ஆதரிப்பதாக இறுதி முடிவை எடுத்தது. அந்த அறிக்கையை வெளியிட்டதும் மாவையே.
வவுனியாவில் சஜித்தை ஆதரவளிப்பதாக அறிக்கையை வெளியிட்டு விட்டு யாழ்ப்பாணம் திரும்பிய மாவை, கிளிநொச்சியில் நடந்த தமிழ்ப்பொது வேட்பாளரை ஆதரிக்கும் கூட்டத்தில் ஏறி, கொள்கைக்காக, லட்சியத்துக்காக, விடுதலைக்காக வாக்களிக்க வேண்டுமென்றார்.
இவ்வாறு பேசி பொதுவேட்பாளர் அரியநேத்திரன் உட்படப் பலரையும் சிலிர்க்க வைத்தார் மாவை சேனாதிராஜா.
அப்படியென்றால் இவ்வாறு மாறி மாறித் தீர்மானத்தை எடுத்துக் கட்சியையும் மக்களையும் குழப்பும் மாவையின் மீது கட்சி என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று கேட்கிறார் கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர்.
இது ஒருபுறமிருக்க மாவையின் மகன் கலையமுதன், தந்தையை விஞ்சும் வகையில் சஜித், ரணில், பொதுவேட்பாளர் எனத் தொடர்ந்து சந்திப்புகளைச் செய்து கொண்டிருந்தார். கலையமுதனின் இவ்வாறான வேட்பாளர் சந்திப்புகளை மாவையும் மகனும் இனியும்
மேற்கொள்ளக் கூடும் எனத் தெரிகிறது.
மாவையின் இவ்வாறான அரசியல் நடவடிக்கைகளால் (குத்துக்கரணங்களால்) கட்சியின் ஆதரவாளர்களும் மக்களும் குழப்பத்திற்குள்ளாகியுள்ளனர்ர்.
அதைவிட வேட்பாளர்கள் அதி உச்சக் குழப்பமடைந்துள்ளனர்.
இவ்வாறு வேட்பாளர்களைக் குழப்பத்திற்குள்ளக்குவதே தலைவரின் (தந்தையின்) இராசதந்திரம் என்கிறார் மாவை சேனாதிராஜாவின் மகன் கலையமுதன்.
தேர்தலுக்கு இன்னமும் ஐந்து நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் மேலும் என்னவெல்லாம் நடக்கும் எனத் தெரியாத தடுமாற்றத்தில் உள்ளனர் கட்சியின் மூத்த உறுப்பினர்கள்.