இலங்கையின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும் ஜனாதிபதித் தேர்தல் வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது.
ஊழல், அதிகார துஸ்பிரயோகம், திறனில்லாத அரசசேவை, வீண் விரயம் போன்ற பல்வேறு காரணங்களினால் இலங்கையே பற்றியெரிந்த ஓன்றரை ஆண்டுக்கு பின்னர் இந்த தேர்தல் நடக்கிறது.
இலங்கையின் எதிர்காலத்தை தீர்மானிக்கவுள்ள தேர்தல் என்ற வகையில், முன்னெப்பொழுதும் இல்லாதளவில் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இது அமைந்துள்ளது.
30 இற்கும் அதிகமான வேட்பாளர்கள் இதில் களமிறங்கியிருந்தாலும், 4 பிரதான வேட்பாளர்களை சுற்றியே தேர்தல் மையம் கொண்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திசாநாயக்க, நாமல் ராஜபக்ச என்ற அந்த நால்வரில், நாமலை பட்டியலில் இருந்து எடுத்து விடலாம். அவர் தனது கட்சியின் வாக்காளர்களை காப்பாற்ற களமிறங்கியவர். என்றாலும், இலங்கை அரசியல் வரலாற்றில் ஜனாதிபதி தேர்தலொன்றில் 4வதாக இடம்பிடித்த எந்தவொரு வேட்பாளரையும் விட, நாமல் அதிகமான வாக்குகளை பெறுவார்.
எஞ்சிய 3 பேரை சுற்றியே போட்டி மையம் கொண்டுள்ளது.
ஒன்றரை ஆண்டின் முன்னர் இலங்கை மக்கள் மாற்றம் ஒன்றை கோரி, தெருவில் இறங்கியிருந்தனர். ஊழல் ஆட்சியாளர்கள் விரட்டியடிக்கப்பட்டதுடன், ஊழல்வாதிகள் பலரின் வீடுகளும் எரிக்கப்பட்டன.
அமைப்பு மாற்றம் ஒன்றைகோரி அப்போது போராட்டம் நடந்தது. அந்த மாற்றம் நிகழ்ந்ததா என்பது மிகப்பெரிய கேள்வி.
இந்த அமைப்பு மாற்றம் நிகழாமல் போனதற்கு காரணங்களில் – அப்போது பிரதமராகவும், ஜனாதிபதியாகவும் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதும் ஒன்று.
இலங்கை அரசியலில் ஊழல் கலாச்சாரம் தவிர்க்க முடியாத அங்கமாகி விட்டது. இந்த கறை படிந்த அரசியலின் அங்கமாக ரணில் விக்கிரமசிங்கவும் உள்ளார். ஐ.தே.க, சுதந்திரக்கட்சியென்ற இரண்டு அதிகார மையங்களில் பின்னர் பெரமுனவும் இணைந்தது. இந்த தரப்பு ஒருவரையொருவர் காப்பாற்றிக்கொண்டு ஊழல் மோசடியில் ஈடுபட்டு வந்தது. ஊழலுக்கு எதிரான கோசங்களை கவர்ச்சிகரமாக முன்வைத்துக் கொண்டு, எதிர்தரப்பு ஆட்சியின் ஊழல் மோசடிக்கு நடவடிக்கையெடுப்பதாக கூறி ஆட்சிக்கு வரும் தரப்புக்கள், எந்தவொரு ஊழல் அதிகார மையத்துக்கு எதிராகவும் நடவடிக்கையெடுத்த வரலாறேயில்லை. இதுதான் இலங்கையின் சாபம்.
இலங்கை மக்கள் எரிவாயுவுக்கும், எரிபொருளுக்கும், அத்தியாவசிய பொருட்களுக்கும் வரிசையில் நின்றதுக்கு மிக முக்கியமான இரண்டு காரணங்களில் ஒன்று- ஊழல், வீண் விரயமே. மற்றது, கோட்டாபய தொடர்புபட்ட சர்வதேச அரசியல்.
இலங்கையின் ஆட்சியாளர்கள் அனைவருமே இலங்கையின் வீழ்ச்சிக்கு ஏதோவொரு விதத்தில் பங்களித்தவர்கள் என்ற போதும், கடந்த 30,40 வருட ஆட்சியாளர்களை முன்னிறுத்தி நாம் முடிவுகளை எடுக்கலாம்.
கடந்த 40 வருட வரலாற்றில் இலங்கையின் அதிகார மையங்களில் ஒன்றான ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கிய அடையாளமாக ரணில் விக்கிரமசிங்க நீண்டகாலம் காணப்படுகிறார். அவர் பிரதமராக அங்கம் வகித்த நல்லாட்சி காலத்தில் இலங்கையின் மிகப்பெரிய ஊழல் மோசடிகளில் ஒன்றான மத்திய வங்கி பிணைமுறி மோசடி நடந்தது. அவர் தலைமைதாங்கிய அமைச்சரவையே அதன் பிரதான பங்காளர்கள்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெரியாமல் நடந்தது என அப்பாவித்தனமாக சிந்திக்கும் பலர் இப்பொழுதும் உள்ளனர். ஆனால் அவர்கள் மற்றொருவிதமாக சிந்திப்பதில்லை. அந்த மோசடி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெரியாமல் நடந்ததெனில்- அவர் மிஸ்டர் கிளீன் எனில்- தனது ஆட்சிக்காலத்திலேயே அந்த தவறை ஏன் சரிசெய்யவில்லை?
தவறை சரி செய்ய வாய்ப்பிருந்தும் அதை செய்யாமல், மத்திய வங்கி பிணைமுறி மோசடிக்குற்றச்சாட்டுக்குள்ளான அர்ஜூன் மகேந்திரன் போன்றவர்கள் தப்பிச்செல்ல வாய்ப்பளித்ததாக ரணில் மீது குற்றச்சாட்டு உள்ளது.
இது அண்மைய உதாரணமொன்று.
ஐதேக ஆட்சிகளில் ஊழல் ஒரு அங்கமாக இருந்தது வரலாறு. அதேபோல, அவர்களின் எதிர்த்தரப்புக்களின் ஆட்சிகளும் ஊழல் வரலாறே.
ரணில் விக்கிரமசிங்கவை தமிழர்கள் பலர் நரியென சொல்வதுண்டு.
இலங்கையின் வெறெந்த ஆட்சியாளர்களை விடவும், ஆட்சிகளில் இருக்கும் போது அதிக நெளிவு சுளிவுகளை செய்தவர் அவர். அதுவும் அதிகார துஸ்பிரயோகம்தான். ஆட்சியின் சீரழிவுக்கு காரணங்களில் ஒன்றுதான்.
ரணிலின் அண்மைய கடந்த காலம் தேர்தலை விரும்பியதில்லை. கடந்த நல்லாட்சியில் மாகாணசபை தேர்தலை சிக்கலாக்கினார். தற்போது உள்ளூராட்சிசபை தேர்தலை சிக்கலாக்கினார். இந்த சிக்கல்களை உருவாக்கிய போது, அதிகாரிகளை வலையில் வீழ்த்தி, அந்த சிக்கல் வலைகளை உருவாக்குகிறார். கடந்த உள்ளூராட்சிசபை தேர்தலை சிக்கலாக்கியவர்களில் வடக்கு ஆளுனர் சாள்ஸூம் ஒருவர். அவர் தேர்தலை சிக்கலாக்கியதன் பரிசுதான் வடக்கு ஆளுனர் என்ற விமர்சனம் அப்போது எழுந்தது. ஊழல் அதிகாரிகள் இவ்விதமான சூழ்ச்சிகளில் பங்கேற்று, தம் மீதான நடவடிக்கைகளை தவிர்த்துக்கொள்ளும் ஒரு மோசமான அரசியல் கலாச்சாரம் ரணிலின் ஆட்சிகளில் உருவெடுக்கிறது. ரணில் தான் அதிகாரத்தை தக்க வைக்க, தூய்மையான அரச நிர்வாகத்திற்கு வாய்ப்பேயில்லாத மோசமான கலாச்சாரத்தையும் உருவாக்க துணிந்தவர்.
இலங்கையர்கள் தமது சந்ததிகளாவது நிம்மதியாக வாழும் நாட்டை உருவாக்க வேண்டுமெனில், மாற்றமொன்றை சிந்திக்க வேண்டிய தருணமிது.
பரிசோதனைகளுக்கு இது உகந்த பொழுதல்ல என ஆட்சியாளர்கள் மேடைகளில் கூறுகிறார்கள். இது மக்களை அச்சமூட்டும் உத்தி. மாற்றத்துக்கான- பரிசோதனைக்கான தருணம் இதுவே. இப்பொழுது இல்லாவிட்டால் எப்பொழுதும் அதற்கான வாய்ப்பிருக்காது. நமது சந்ததி பின்னொரு நாளில் எரிவாயுவுக்கும், எரிபொருளுக்கும் வரிசையில் நின்று, ஆட்சியாளர்களின் வீடுகளை கொளுத்தும் சமயத்தில்த்தான் அந்த தருணம் உருவாகும். அப்படியொரு நெருக்கடியை நமது சந்ததிக்கு கொடுக்காமல், இப்பொழுதே முறையான நாட்டையும்- நேர்மையான அரசியலையும் கட்டியெழுப்ப பரிசோதனைகளை ஆரம்பிக்க வேண்டும்.
இலங்கையின் அதிகார மையம் இரண்டு என்ற வழக்கம்- ஊழலின் அடிப்படை. இதுவரை நடந்ததை போல இரண்டு அதிகார மையங்களும் ஒருவரையொருவர் காப்பாற்றிக் கொண்டிருப்பார்கள். மூன்றாவது, நான்காவது அதிகார மையங்களும் உருவாகுவது, பொறுப்புக்கூறலுக்கு வாய்ப்பேற்படுத்தும். இது நடக்கிறதோ இல்லையோ- இதுவரை ஆட்சிக்கு வராத ஒருவரை ஆட்சி பீடமேற்றும் பரிசோதனை முயற்சியையாவது செய்து பார்க்க வேண்டும். அவரும் பொறுப்பை நிறைவேற்றவில்லையென்றால், அடுத்த முறை இன்னொரு புதியவருக்கு வாய்ப்பளிக்கும் மக்களின் வாக்குப்பலம்- மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தை ஆட்சியாளர்கள் மீது உருவாக்கும்.
எரிவாயு, எரிபொருள் வரிசையை இல்லாமல் ஆக்கினேன், இலங்கை நாணயத்தின் பெறுமதியை குறைத்தேன், அடுத்தமுறையும் தான் வெற்றிபெறா விட்டால் எரிபொருளும், எரிவாயுவும் கிடைக்காது என ரணில் விக்கிரமசிங்கவும், அவரை ஆதரிக்கும் கட்சிகளும் மிரட்டல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இதை வெறும் மிரட்டல் என்றளவிலேயே எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்கு அப்பால் வேறெந்த பெறுமானமும் இல்லாதது.
நாட்டை அப்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டதாக ரணில் சொல்வது உண்மைதான். ஆனால், அவர் நாட்டை நிரந்தரமாக மீட்கவில்லை. நாடு வங்குரோத்தானதற்கான காரணங்களை பாதுகாத்துக் கொண்டு, நிவாரணத்தை பெற்றுக்கொடுத்தார். அதுவும் மக்கள் மீது தாங்க முடியாத வரிச்சுமையை சுமத்தியே இந்த பொருளாதார மீட்பு நடந்தது.
ஆனால், நாட்டுக்கு தேவையாக இருந்தது அதுவல்ல. நாட்டை கொள்ளையடித்தவர்களிடமிருந்து பணம் மீட்கப்பட்டிருக்க வேண்டும். பெரு முதலாளிகளினால் செலுத்தப்படாமலுள்ள வரி அறவிடப்படவில்லை. நாடு வங்குரோத்தானதற்கான காரணங்கள் களையப்படவில்லை.
கோட்டாபய ராஜபக்ச தப்பியோடிய பின்னர் எரிபொருளும், எரிவாயுவும் கிரமமாக வந்ததன் பின்னணியில் சர்வதேச அரசியலுண்டு. அது ரணில் வந்ததால்தான் நிகழ்ந்தது என்பதல்ல. அரியநேந்திரன் ஜனாதிபதியாகியிருந்தாலும் அது நடந்திருக்கும். இது ரணிலால் மட்டும் நிகழ்ந்த மாயம் என்பது திரைக்கதை.
இலங்கை வங்குரோத்தடைய காரணமாக இருந்தவர்களில் ஒருவரான ரணில், அதை மீட்கும் பொறுப்பு கிடைத்த போதும், அதை சரியாக செய்யவில்லையென்பதே உண்மை.
பங்களாதேஸில் பிரதமர் ஹசீனா தப்பியோடிய பின்னர், போராட்டங்களை ஒடுக்க அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக அவர் மீது கொலை வழக்கே பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியே புதிய அரசாங்கத்தால் வெளிப்படுத்தப்படவில்லையென கர்தினால் குற்றம்சாட்டுகிறார். இலங்கை அதிகார மையங்கள், எவ்வாறு- என்ன உடன்படிக்களின் கீழ்- அதிகாரத்தை பரிமாறிக்கொள்கின்றன என்பதற்கான உதாரணம் இது.
ரணில் பிரதமராகி, ஜனாதிபதியானது இந்த மோசடி அமைப்பை அப்படியே பாதுகாத்துள்ளது.
ரணில் கடந்த பல தசாப்தங்களாக அரசியலிலும், அதிகாரத்திலும் இருந்த போதும், அவரால் குறிப்பிடத்தக்க எந்தவொரு சாதனையையும் பிரச்சாரத்தில் முன்னிலைப்படுத்த முடியவில்லை. நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டேன், நாணயத்தின் பெறுமதியை வலுப்படுத்தினேன், எரிவாயு- எரிபொருள் வரிசையை இல்லாமலாக்கினேன் என்பதை மையப்படுத்தியே பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. இந்த விடயங்கள் ரணில் அல்லாத யார் ஆட்சிக்கு வந்தாலும் நடந்திருக்கக்கூடியது. ஒருவேளை, ரணில் வராமலிருந்திருந்தால் மாற்றமொன்று நிகழ்ந்து, திருடர்களின் பணமும் பறிக்கப்பட்டிருக்கலாம். அப்படியெனில் மக்கள் இன்றைய சுமைகளை சுமந்திருக்கத் தேவையில்லை.
ரணில் ஜனாதிபதியாவதே இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஒரே வழி, ரணில் ஜனாதிபதியாகா விட்டால் நாடு மீண்டும் வரிசை யுகத்துக்கு செல்லும் என்பதெல்லாம்- சிறு பிள்ளைகளுக்கு பூச்சாண்டி காட்டி உணவூட்டும் பாணி கதைகள். அவற்றில் துளியும் உண்மை கிடையாது.
இலங்கையின் அதிகார மையங்கள் மாற்றமடைவதே இலங்கை மீட்சியடைய ஒரே வழியென்ற உண்மையை உணர்ந்து வாக்களிப்பதும், நமது சந்ததியின் எதிர்காலத்துக்காக சேர்க்கும் சொத்தே.
இம்முறை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ரணில் தவிர்ந்த ஏனைய யாருமே ஜனாதிபதியாக பதவிவகித்திருக்கவில்லை. இவர்களில் வெற்றி பெறக்கூடியவர்கள் என எதிர்பார்க்கப்படுபவர்கள் சஜித், அநுர ஆகியோரே. அவர்கள் தம்மை பற்றிய சித்திரத்தை உருவாக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கவில்லை. அதனால் அவர்கள் பற்றிய முன் கற்பிதங்கள் அவசியமானதல்ல. இவர்களில் யாருக்கேனும் சந்தர்ப்பம் வழங்குவது புதிய இலங்கைக்கான பயணத்தின் தொடக்கமாக இருக்கலாம்.