தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிப்பதென இலங்கை தமிழ் அரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளை எடுத்த முடிவு ஏகமனமானதே என, அந்த கிளையின் தலைவர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.
இன்று (16) காலை தமிழ்பக்கத்தை தொடர்பு கொண்டு இந்த தகவலை தெரிவித்தார்.
பொதுவேட்பாளரை ஆதரிப்பதென வட்டுக்கோட்டை தொகுதிக்கிளை எடுத்த முடிவு ஏகமனமானதல்ல, அந்த தீர்மானத்துக்கு தாம் உடன்படவில்லையென- அந்த கிளையை சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் தமிழ்பக்கத்தை தொடர்பு கொண்டு தெரிவித்திருந்தனர்.
அத்துடன், தேர்தல் பிரச்சார விளம்பரத்துக்காக பொதுவேட்பாளர் ஆதரவு அறிவிப்பை தள்ளிவைத்திருந்தீர்களா என கேள்வியெழுப்பியதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
இதையடுத்து, இன்று காலை தமிழ்பக்கத்தை தொடர்புகொண்ட தொகுதிக்கிளை தலைவர் ஈ.சரவணபவன், இந்த செய்தியை மறுத்தார்.
ஜெயந்தன் என்ற உறுப்பினர் மட்டுமே தீர்மானத்துடன் உடன்படவில்லையென்றும், அவர் அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாக்களிக்கப் போவதாக தெரிவித்ததாகவும், அவரது நிலைப்பாட்டை எழுத்துமூலம் சமர்ப்பிக்குமாறு கேட்டபோதும், அவர் அதை கையளிக்க தயாராக இருக்கவில்லையென்றும் தெரிவித்தார்.