பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பிலிப்பைன்ஸ் நாட்டின் பிரபல பாதிரியார் அப்போலோ குயிபோலாயை, ஆதரவாளர்களின் கடும் எதிர்ப்புக்கு இடையே போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் டாவோ நகரில் உள்ளது ‘தி கிங்டம் ஒப் ஜீசஸ் கிரைஸ்ட்’ தேவாலயம். 74 ஏக்கர் பரப்பளவில் கல்லூரி மற்றும் ஆடிட்டோரியத்துடன் இந்த தேவாலயம் அமைந்துள்ளது. இங்கு பாதிரியாராக இருப்பவர் அப்போலோ குயிபோலாய். இந்ததேவாலயத்துக்கு வரும் பல்லாயிரக்கணக்கான மக்கள், இவரின்தீவிர ஆதரவாளர்களாக இருந்துள்ளனர். இவர் தன்னை இந்த பிரபஞ்சத்தின் உரிமையாளர் என்றும், கடவுளால் நியமிக்கப்பட்டவர் என்றும் தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டியூடெர்டேவின் நீண்டகால நண்பராகவும் இவர் உள்ளார்.இவர் போலி அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார்.
2019 ஆம் ஆண்டில், குய்போலோய் தெற்கு பிலிப்பைன்ஸைத் தாக்கிய ஒரு பெரிய பூகம்பத்தை நிறுத்தியதாகக் கூறினார்.
தேவாலயத்தின் உறுப்பினர்கள் முறைகேடாக பெறப்பட்ட விசாக்கள் மூலம் அமெரிக்கா அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களின் பணிஅறக்கட்டளைக்கு அமெரிக்காவில் நிதி திரட்டுவதாகும். இவர்கள் கோடிக்கணக்கான பணத்தை அமெரிக்காவில் இருந்து பிலிப்பைன்ஸுக்கு கடத்தி வந்துள்ளனர்.
இது தொடர்பாக பாதிரியார் அப்போலோ குயிபோலாய் மீது அமெரிக்காவில் வழக்கு உள்ளது.இந்த நிதி பாதிரியாரின் சொகுசு வாழக்கைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இவருக்கு உதவியாளர்களாக 12 வயது முதல் 25 வயதுக்குஉட்பட்ட பெண்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் பல பகுதிகளில் இருந்து கடத்தி வரப்பட்டுள்ளனர். இவர்களின் பணி பாதிரியாரின் பாலியல் தேவைகளை நிறைவேற்றுவது. இதனால் குழந்தைகளை கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவதாகவும் பாதிரியார் அப்போலோ மீது அமெரிக்காவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவரை கைது செய்யும்படி பிலிப்பைன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து பாதிரியார் அப்போலோ தலைமறைவானார். தேவாலய வளாகத்துக்குள் போலீஸார் நுழைய மக்கள் தடுத்தனர். அவர் தனது தேவாலயத்தின் பாதாள அறையில் பதுங்கி இருக்கலாம் என பிலிப்பைன்ஸ் போலீஸார் கருதினர்.
தேவாலயத்தை 2 ஆயிரம் போலீஸார் நேற்று முன்தினம் சுற்றிவளைத்தனர். தேவாலய வளாகத்தை கண்காணிக்க ஹெலிகொப்டரிலும் போலீஸார் வலம் வந்தனர். தெர்மல் இமேஜிங் கருவிகளுடன் தேவாலய வளாகத்துக்குள் பாதிரியார் அப்போலோவை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர். இறுதியாக அவரை போலீஸார் கண்டுபிடித்து கைது செய்தனர். தன் மீதான குற்றச்சாட்டுகளை பாதிரியார் அப்போலோ மறுத்துள்ளார்.