வடமராட்சி, குஞ்சர்கடையிலுள்ள கொலின்ஸ் விளையாட்டு மைதானத்தின் வாயில் கதவை பலவந்தமாக பூட்டி, திறப்பை கொண்டு சென்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் தந்தை மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் மனைவி ஜலனி பிரேமதாச கலந்துகொள்ளும் கூட்டம் நாளை (10) அந்த மைதானத்தில் நடக்கவிருந்த நிலையில், மைதானத்தை பலவந்தமாக பூட்டி திறப்பை கொண்டு சென்றதாக அங்கஜனின் தந்தை இராமநாதன் மீது விளையாட்டு மைதான நிர்வாகம் குற்றம்சாட்டியது.
இந்த மைதானத்தில் அண்மையில் ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரச்சார கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தை அங்கஜன் இராமநாதன் தரப்பினர் ஏற்பாடு செய்தனர். அங்கஜன் அண்மையில் ரணில் பக்கம் பல்டியடித்தார். மதுபானச்சாலை உரிமத்தை பெற்றுக்கொண்டு அவர் பல்டியடித்ததாக அடக்குமுறைக்கு எதிரான அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா யாழில் பகிரங்கமாக குற்றம்சாட்டியதுடன், புதிய மதுபான உரிமம் தொடர்பான ஆவணங்களையும் பகிரங்கப்படுத்தியிருந்தார்.
ரணிலின் கூட்டத்தை நடத்த மைதனத்தை பயன்படுத்த ஒரு நாள் மட்டுமே அங்கஜன் தரப்பினர் பொலிஸ் நிலையத்தில் அனுமதி பெற்றிருந்தனர். பின்னர், சஜித்தின் கூட்டம் திட்டமிடப்பட்டதும், ஒரு வாரத்துக்கு பொக்கற் மீற்றிங் நடத்த மைதானத்தை பெற்றுள்ளதாக குறிப்பிட்டனர். இது சஜித்தின் கூட்டத்தை குழப்ப திட்டமிடப்பட்ட சதி நடவடிக்கையென குற்றம்சாட்டப்பட்டது.
அத்துடன், சஜித்தின் கூட்டத்தை ஏற்பாடு செய்த அங்கஜனின் தந்தையின் சகோதரனின் வர்த்தக வலையமைப்பு பிரமுகர் மீதும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இந்த நிலையில், மைதானத்தை பலவந்தமாக பூட்டி திறப்பை எடுத்து சென்றதாக குறிப்பிட்டு, மைதான நிர்வாகத்தினர் நெல்லியடி பொலிஸ் நிலையத்துக்கு சென்றனர். இரு தரப்பையும் அழைத்த பொலிசார், குழப்பத்தை சுமுகமாக முடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர்.