நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் கார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சஞ்சீவ மஹாநாம, போதைப்பொருள் கடத்தலை ஆதரிப்பதன் மூலம் பெரிய அளவில் சட்டவிரோதமான முறையில் சொத்துச் சம்பாதித்தமை தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு அனுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
மஹாநாம போதைப்பொருள் கடத்தல் மூலம் வேறு நபர்களின் பெயரில் சட்டவிரோதமாக பணம் சம்பாதிப்பதாகவும் அதன் மூலம் கிடைத்த சொத்துக்கள் இருப்பதாகவும் போதைப்பொருள் வியாபாரிகள் இருவர் அனுராதபுரம் பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சந்தேக நபருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுக்கு பெயர் போன தர்ம ஸ்ரீ புஷ்ப குமார, லங்கா உமா பத்திரன என்ற குடு மெனிகே ஆகியோர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர் நீண்டகாலமாக ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளை கடத்த அனுமதித்துள்ளதாகவும், அதன் மூலம் ஈஸி கேஷ் முறையில் தினமும் பெறப்பட்டு வேறு நபர்களின் பெயரில் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் முறைப்பாடு செய்த கடத்தல்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
உண்மைகளை பரிசீலித்த தலைமை நீதவான், விசாரணையின் முன்னேற்றத்தை உடனடியாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.