வவுனியாவில் தற்காலிகமாக வசித்து வந்த குடும்பப் பெண்ணொருவரை கடத்திக் கொண்டு யாழ்ப்பாணம் நோக்கி தப்பி வந்தபோது, கைது செய்யப்பட்ட 4 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 29ஆம் திகதி இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
வவுனியா, கொக்குவெளி, அரசடி வீதியிலுள்ள வீடொன்றில் இருந்து இந்த குடும்பப் பெண் கடத்தப்பட்டுள்ளார்.
வாகனத்தில் வந்த நான்கு இளைஞர்கள், குடும்பப் பெண்ணை கடத்திச் சென்ற போது, அதனைத் தடுக்க முயன்ற அவரது மாமியாரையும் நான்கு இளைஞர்கள் தாக்கி, உதைந்து விழுத்தி விட்டு, பெண்ணை வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸ் குழுவொன்று வகனம் பயணித்த திசைக்கு சென்று வாகனத்தை மடக்கிப் பிடித்து, யுவதியை கடத்திச் சென்ற நபர்களை கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மணியத்தோட்டம், இருபாலை, மற்றும் சுன்னாகம் பகுதிகளில் வசிக்கும் நான்கு இளைஞர்களால் யுவதி கடத்தப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், மணியந்தோட்டத்தை சேர்ந்த 32 வயதான 3 பிள்ளைகளின் தாயாரே கடத்தப்பட்டார். அவர் திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், சில காலத்தின் முன்னர் அதே பகுதியை சேர்ந்த இன்னொருவருடன் இரகசிய உறவு ஏற்பட்டுள்ளது. அந்த நபரும் திருமணமாகி, பிள்ளைகள், மனைவியுடன் வசித்து வந்தவரே.
மேற்படி பெண், தனது கணவனுக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி, அந்த நபருடன் வாழச் சென்றார். அந்த வீட்டில் அவரது மனைவி வசித்து வந்த நிலையில், கள்ளக்காதலியையும் அந்த வீட்டிலேயே குடியிருக்க வைத்தார். கள்ளக்காதலனுடன் சென்ற பெண்ணின் பிள்ளைகள், வீட்டில் தந்தையுடன் வசித்து வந்தனர்.
சில காலம் கள்ளக்காதலனுடன் வசித்து வந்த பெண், காதலன் தன்னை அடிப்பதாக தெரிவித்து, அவரது வீட்டிலிருந்து வெளியேறி, மீண்டும் கணவனிடம் வந்துள்ளார். இதையடுத்து, அவரையும் பிள்ளைகளையும் வவுனியா, கொக்குவெளியிலுள்ள தனது தாயார் வீட்டுக்கு அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.
சம்பவ தினமன்று, பிள்ளைகளை பாடசாலையில் இறக்குவதற்காக கணவன் வீட்டை விட்டு வெளியேறி சென்ற நிலையில், கள்ளக்காதலன் மற்றும் நண்பர்கள், அந்த பெண் தங்கியிருந்த வீட்டுக்கு சென்றுள்ளனர். பெண்ணின் மாமியார் வீட்டிலிருந்து வெளியே வந்த போது, அவரது மகனின் பெயரை குறிப்பிட்டு, அவரை சந்திக்க வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். அவர்களை வீட்டுக்கு அழைத்த போது, அவர்கள் உள்ளே நுழைந்தனர். அந்த சமயத்தில் குளித்து விட்டு வெளியே வந்த மருமகளை அவர்கள் அலேக்காக அள்ளித்தூக்கி வாகனத்தில் ஏற்றியுள்ளனர். இதை தடுக்க முனைந்த மாமியாரையும் தாக்கினர்.
அவர்கள் கைது செய்யப்பட்டதையடுத்து, கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.