யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவிற்கு வந்து யுவதி ஒருவரை வலுக்கட்டாயமாக கடத்தி யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் சென்ற நான்கு இளைஞர்கள் மற்றும் வாகனம் ஒன்று நேற்று (29) இரவு வவுனியா பொலிஸ் உத்தியோகத்தர்களினால் பளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா, கொக்குவெளி, அரசடி வீதியிலுள்ள வீடொன்றில் இருந்து இந்த யுவதி கடத்தப்பட்டுள்ளார்.
வாகனத்தில் வந்த நான்கு இளைஞர்கள் யுவதியை கடத்திச் சென்ற போது, அதனைத் தடுக்க முயன்ற அவரது மாமியாரையும் நான்கு இளைஞர்கள் தாக்கி, உதைந்து விழுத்தி விட்டு, யுவதியை வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸ் குழுவொன்று வகனம் பயணித்த திசைக்கு சென்று வாகனத்தை மடக்கிப் பிடித்து, யுவதியை கடத்திச் சென்ற நபர்களை கைது செய்துள்ளனர்.
காதல் உறவின் அடிப்படையில் நான்கு இளைஞர்கள் யுவதியை கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதுடன், குறித்த நான்கு இளைஞர்களில் ஒருவர் குறித்த யுவதியை சில காலத்திற்கு முன்னர் காதலித்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் மணியத்தோட்டம், இருபாலை, மற்றும் சுன்னாகம் பகுதிகளில் வசிக்கும் நான்கு இளைஞர்களால் யுவதி கடத்தப்பட்டுள்ளார்.
யுவதியிடம் வாக்குமூலம் பெற்று, மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், நான்கு இளைஞர்களையும் வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்த வவுனியா பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.