ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து செயலாளர் பாலித ரங்கே பண்டார நீக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பதவியில் இருந்து பாலித ரங்கே பண்டாரவை நீக்கியமை தொடர்பான கடிதத்தில் கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கையொப்பமிட்டுள்ளார். இதற்கான கையொப்பங்கள் நேற்று (29) கைச்சாத்திடப்பட்டதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாலித ரங்கே பண்டார பொதுச் செயலாளர் பதவி தொடர்பான கடமைகளை சரியாக செய்யவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கட்சிகள்
தலைமை இது தொடர்பான முடிவை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.
‘ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகிய தலதா அத்துகோரளவை ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பதவிக்கு நியமிக்குமாறு கட்சியில் சில தரப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அறியமுடிகிறது.
எனினும், இது வரையில் தலதா அத்துகோரள ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையைப் பெறவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் பாலித ரங்கே பண்டாரவிடம் வினவியபோது, இது தொடர்பாக இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை என்றார்.
“எனக்கு ஒரு கடிதம் வந்தால், நான் உங்களுக்கு சொல்கிறேன்,” என பண்டார கூறினார்.