திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் அனைவரும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு தமது ஆதரவை வழங்க ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதாக
தெரிவித்தனர்.
இன்று (29) திருகோணமலையில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சியின் காரியாலயத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே ஏகமனதாக குறித்த தீர்மானம் எட்டப்பட்டதாக தெரிவித்தனர்.
குறித்த சந்திப்பில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் அவர்களின் தலைமையில் ஒன்று கூடிய முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு அவரின் சங்கு சின்னத்தில் வாக்கு சேகரிப்பதற்கு ஏக மனதாக தீர்மானிக்கப்பட்ட தாகவும் தமது பிரதேச மக்களின் ஏக மனதான முடிவு இதுதான் எனவும் ஆகையினால் தாம் அனைவரும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சங்கு சின்னத்துக்கு ஆதரவளிப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தனர்.
மேலும் இதுபோன்று இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழுவும் ஒன்று கூடி தமிழ் பொது வேட்பாளராகிய பா.அரியநேத்திரன் அவர்களுக்கு தமது ஆதரவினை வழங்கி சங்கு சின்னத்துக்கு வாக்களிப்பதற்கு தீர்மானம் எட்ட வேண்டும் என இதன் போது கேட்டுக் கொண்டுள்ளனர்.
குறித்த தீர்மானம் தொடர்பில் திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சங்குச் சின்னத்தில் போட்டியிடுகின்ற தமிழ் பொது வேட்பாளருக்கு திருகோணமலை வாழ் மக்களதும் மக்கள் பிரதிநிதிகளதும் ஏகோபித்த ஆதரவினை வழங்க தீர்மானித்திருப்பதாக தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பாக மத்திய குழுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி அது தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் இதன்போது கருத்து வெளியிட்டனர்.
இன்றைய ஒன்று கூடலில் திருகோணமலை மாவட்ட பிரதேச சபை உறுப்பினர்கள்,மாகாண சபை உறுப்பினர்கள் கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-ரவ்பீக் பாயிஸ் –




