உயர் நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக வாக்குமூலங்களை சமர்ப்பித்ததன் காரணமாக சட்டத்தரணியாக கடமையாற்றுவதில் இருந்து இடைநிறுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள டபிள்யூ.டி.தர்மசிறி கருணாரத்ன, தனக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நேற்று (28) உயர் நீதிமன்ற மண்டபத்தில் மயங்கி விழுந்தார்.
மேல்முறையீட்டு நீதிமன்ற ஆவணக் காப்பகத்திற்குள் நுழைந்து, அனுமதியின்றி வழக்குப் பதிவை எடுத்து, ஆவணத்தை அழித்ததற்காக, சட்டத்தரணி தொழிலின் நெறிமுறைகளை மீறியதற்காக, அவர் மீதான வழக்கு, உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அவரை சிறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
தொழில்முறை நெறிமுறைகளை மீறியதாக புகார் அளிக்கப்பட்டபோது, நீதிபதிகள் முன் நின்று கொண்டிருந்த அவர், உரத்த குரலில் கத்திக் கொண்டே மயங்கி விழுந்தார். அப்போது சிறைச்சாலை உத்தியேகத்தர்கள் வந்து சக்கர நாற்காலியில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
இந்த மனுவை ஒக்டோபர் 30ஆம் திகதி விசாரிக்கும் நீதிபதிகள், அதுவரை அவரை காவலில் வைக்க உத்தரவிட்டனர்.