தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
சம்பளக் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் எச்.கே.கே.ஏ.ஜயசுந்தரவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தேயிலைத் தோட்டத் தொழிலாளி ஒருவரின் நாளாந்த சம்பளம் 1,350 என்றும், குறித்த சம்பளம் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியக் கொடுப்பனவுகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்றும், உரிய வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக உற்பத்தித்திறன் அடிப்படையில் ஊக்கத்தொகையாக 350 ரூபா வழங்கப்பட வேண்டும் என வர்த்தமானி அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இறப்பர் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1,700 ஆக அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முன்மொழிவுகள் தொடர்பிலான ஆட்சேபனைகள் மற்றும் ஆட்சேபனைக்கான காரணங்களின் அறிக்கையுடன் எதிர்வரும் 28ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு முன்னர் தமக்கு அனுப்பி வைக்குமாறும் சம்பளக் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.