தோட்ட தொழிலாளர்களின் 1700 ரூபா சம்பள நிர்ணயம் நிச்சயம் கிடைக்கும் என கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
இன்று (11) திருகோணமலையில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்…
சம்பள நிர்ணய சபை நாளை கூட இருப்பதனால் தோட்டத் தொழிலாளர்களின் 1700 ரூபாய் சம்பள உயர்வு நிச்சயம் கிடைக்கும் என நம்புவதாக கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார்
மேலும் கடந்த காலங்களில் குறித்த நிர்ணய சபையானது நீதிமன்றத்தில் பல தடவை உத்தரவுகளை பிறப்பித்த போதிலும் இம்முறை குறிப்பிடப்பட்ட பல தடை உத்தரவுகளுக்கு குறிப்பிடப்பட்ட பல காரணங்களை நிவர்த்தி செய்து இம்முறை சம்பள நிர்ணய சபைக்கு முன்வைத்து குறித்த சம்பள உயர்வினை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுநர்.
குறித்த அமைச்சு பதவியும் ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க அவர்களின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதால் மேலும் பல அழுத்தங்கள் இருக்கும் என்பதுடன் குறித்த பிரச்சனைக்கு சரியான தீர்வு கிடைக்கும் என தாங்கள் நம்புவதாக இதன் போது தெரிவித்தார்.
மேற்குறிப்பிட்ட சம்பள உயர்வு தொடர்பாக ஏழு கம்பெனிகள் மாத்திரம் சம்பள உயர்வுக்கான இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் ஏனைய கம்பணிகளின் தோட்டத் தொழிலாளர்கள் இதனால் பாதிக்கப்படுவார்களே என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர்கள காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் இவ்வாறு பதிலளித்தார்.
அரசாங்கத்தினை பொருத்தவரை சம்பள உயர்வு தொடர்பாக வர்த்தமானி வெளியிடப்பட்டால் அந்த சட்டம் 7 கம்பெனிகளுக்கு மாத்திரமல்ல ஏனைய அனைத்து கம்பெனிகளுக்கும் அது பொருந்தும் எனவும் குறித்த வர்த்தமானிக்கு எதிராக கம்பெனிகள் செயல்படுமாக இருந்தால் அதற்காக நீதிமன்றத்தை நாடவும் தயாராக உள்ளதாக இதன் போது சுட்டிக்காட்டினார்.
-ரவ்பீக் பாயிஸ்-