ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான பரந்த அரசியல் கூட்டணியான ஐக்கிய மக்கள் கூட்டணி உத்தியோகபூர்வ அறிமுகம் நேற்று (8) கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவை இலங்கையின் ஜனாதிபதியாக நியமிப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்தக் கூட்டணியில் 10 அரசியல் கட்சிகளும் குழுக்களும் இணைந்துள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின் கூற்றுப்படி, இந்த புதிய அரசியல் கூட்டணி இலங்கையின் வெற்றியை அடையும் நோக்கில் உருவாக்கப்பட்ட நாட்டின் மிகப்பெரிய கூட்டணியாகும்.
ஐக்கிய மக்கள் கூட்டணி ஆனது ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாசிறி ஜயசேகர அணி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் G. L. பீரிஸ் அணி, பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி , பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தலைமையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட பல அரசியல் கட்சிகளைக் கொண்டுள்ளது.
பழனி திகம்பரன் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம், V. ராதாகிருஷ்ணன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி, பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் காங்கிரஸ் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்கவின் புரவெசி ஹண்டா உள்ளிட்ட தரப்புக்களையும் உள்ளடக்கி உத்தியோகபூர்வ ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இதன்போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச, இலங்கையின் அடுத்த தலைமுறைக்கு வலுவான நாட்டை உருவாக்குவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்றார்.
ஐக்கிய மக்கள் கூ்டணியின் கொள்கைகள் நேற்று வெளியீட்டு விழாவில் அறிவிக்கப்பட்டதுடன், சஜித் பிரேமதாசவும் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்வைக்கப்பட்டார்.