தமிழ் பொதுவேட்பாளராக இலங்கை தமிழ் அரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் அறிவிக்கப்படவுள்ளார்.
இன்று (8) தந்தை செல்வா கலையரங்கில் காலை 10.30 மணிக்கு நடக்கும் கலந்துரையாடலை தொடர்ந்து பொதுவேட்பாளராக பா.அரியநேந்திரன் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவேட்பாளராக பா.அரியநேந்திரன், கே.வி.தவராசா ஆகியோரை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இறுதியில் பா.அரியநேந்திரனை பொதுவேட்பாளராக அறிவிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவரது பெயரை இறுதி செய்வதற்கான கலந்துரையாடல் காலை 10.30 மணிக்கு நடைபெற்று, 11 மணியளவில் பொதுவேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படும்.
ஏதாவது ஆச்சரியங்கள் நிகழ்ந்தால் மாத்திரமே அவரது பெயர் நீக்கப்பட்டு, கே.வி.தவராசாவின் பெயர் அறிவிக்கப்படும்.
பா.அரியநேந்திரனின் சுருக்கமான அறிமுகம்
மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாாளுமன்ற உறுப்பினர் கந்தப்போடி உடையார் பாக்கியச்செல்வம். 1955 பெப்ரவரி 1ஆம் திகதி, மட்டக்களப்பு, படுவான்கரை, மன்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள அம்பிலாந்துறை கிராமத்தில் பிறந்தவர்.
1976 வட்டுக்கோட்டை தீர்மானத்தினால் எழுச்சியுள்ள தமிழ் இளைஞர்களில் அரியநேந்திரனும் ஒருவர். தீவிர அரசியலில் பங்கேற்ற அவர், 1977 தேர்தலில் பட்டிருப்பு தொகுதியில் கணேசலிங்கத்தின் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டார். அதை தொடர்ந்து, தமிழ் தேசிய அரசியலில் செயற்பட்டு வந்தார்.
1981ஆம் ஆண்டு கால்நடை உத்தியோகத்தராக நியமனம் பெற்றிருந்தார். 1990 ஆம் ஆண்டுகள் தொடக்கம் சுயாதீன பத்திரிகையாளராகவும் செயற்பட்டு வருகிறார்.
2000களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கத்தில் பங்கேற்றவர்களில் பா.அரியநேந்திரனும் ஒருவர். மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் 2000களில் வெளியான தமிழ் அலை பத்திரிகையின் ஆசிரியராகவும் செயற்பட்டவர். 2004ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் விடுதலைப் புலிகளால் அவர் வேட்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். அந்த தேர்தலில் வெற்றிபெற்றிருந்தார்.
விடுதலைப் புலிகளினால் வெளியிடப்பட்ட தாயகத்தாய் ஒலிப்பேழையில் அவர் பாடல் எழுதியிருந்தார். 2012 கவிதை தொகுதி, முள்ளிவாய்க்கால் காவியம் ஒலிப்பேழை 2016 ஆகியவற்றையும் வெளியிட்டிருந்தார்.
அவருக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர்.