இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 32 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
கொழும்பு பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் கமிந்து மென்டிஸ், அவிஸ்க பெர்னணான்டோ தலா 40 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். துனித் வெல்லாலகே 39 ஓட்டங்களை பெற்றார்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
பின்னர், 241 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 42.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 208 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. முதலாவது ஒருநாள் போட்டியை போலவே, இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர்களின் தாக்குதலில் இந்தியா நிலை தடுமாறியது.
இந்திய அணி சார்பில் அணித்தலைவர் ரோஹித் சர்மா 64 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் ஜெஃப்ரி வாண்டர்சே 6 விக்கெட்டுக்களையும், சரித் அசலங்க 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். வனிந்து ஹசரங்கவின் காயம் காரணமாக அணியில் இணைக்கப்பட்டவர் ஜெஃப்ரி வாண்டர்சே.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
நேற்றைய வெற்றி, ஜூலை 2021 க்குப் பிறகு, இந்தியாவுக்கு எதிரான இலங்கையின் முதல் வெற்றியாகும். வெள்ளியன்று நடந்த முதலாவது போட்டி சமனிலையில் முடிவதற்கு முன்பு இலங்கை தொடர்ந்து ஆறு சந்திப்புகளில் தோல்வியடைந்தது.




