எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்குவது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் கலந்துரையாடல் ஒன்று இன்று (5) யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
மதியம் 1.30 மணியளவில் யாழ்ப்பாணம் வலம்புரி ஹொட்டலில் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
இன்றைய கலந்துரையாடலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்குவது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கவுள்ளதாக சிவில் சமூகமென்ற பெயரில் இயங்கும் தனிநபர் ஒருவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் அல்லது கொழும்பில் வசிக்கும் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவை பொதுவேட்பாளராக களமிறக்க வாய்ப்புள்ளது.
தமிழ் பொதுவேட்பாளராக பா.அரியநேந்திரன் அல்லது கே.வி.தவராசா ஆகிய இருவரில் ஒருவரில் பொதுவேட்பாளராக அறிவிக்கப்படுவார் என தமிழ்பக்கம் அறிகிறது.
ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர்களான இருவரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
அரசியலமைப்பின்படி, கே.வி.தவராசா போட்டியிடுவதெனில், ஏதாவதொரு கட்சியின் சார்பிலேயே களமிறங்க முடியும். பொதுவேட்பாளர் ஏற்பாட்டுக்குழு தயாரித்துள்ள யாப்பின்படி, பொதுவேட்பாளரை களமிறக்க பயன்படுத்தப்படும் கட்சி, இதற்கடுத்த தேர்தலில் போட்டியிட முடியாது. இதனால், க.வி.விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது.
இந்த குழப்பத்தை தீர்க்க, வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலை கூட்டணியின் சின்னத்தை பயன்படுத்தலாமா என முயற்சிக்கப்பட்டது. எனினும், பொதுவேட்பாளருக்கு தமது சின்னத்தை வழங்க முடியாது என மறுத்து விட்டதாக வீ.ஆனந்தசங்கரி தமிழ் பக்கத்திடம் தெரிவித்தார்.
கே.வி.தவராசா களமிறங்குவதெனில், பொதுவேட்பாளர் ஏற்பாட்டுக்குழு தனது யாப்பை திருத்தி, பொதுவேட்பாளருக்காக பயன்படுத்தப்படும் கட்சி, அடுத்த தேர்தல்களில் போட்டியிடலாம் என நிபந்தனை தளர்த்தப்பட வேண்டும்.
இந்த குழப்பத்தை தவிர்க்க, பா.அரியநேந்தரனை சுயேட்சையாக களமிறக்கும் யோசனையும் உள்ளது.
அரியநேந்திரனை பொதுவேட்பாளராக களமிறக்க கட்சிகளின் நிலைப்பாட்டை அறிந்ததாகவும், அனைத்து கட்சிகளும், அமைப்புக்களும் சம்மதித்துள்ளதாக ஏற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் இன்று இறுதித்தீர்மானம் எடுக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.