எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமிழ் பொதுவேட்பாளர் என்ற பெயரில் களமிறக்கப்படவுள்ள வேட்பாளரை, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தீர்மானிப்பதென முடிவாகியுள்ளது.
தமிழ் சிவில் சமூகமென்ற பெயரில் செயற்படும் தனிநபர்களான கட்டுரையாளர்கள் சிலர், தமிழ் பொதுவேட்பாளர் என்ற கோசத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த கோசத்தின் ஆபத்தை பலரும் சுட்டிக்காட்டியுள்ள போதும், அதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
தமிழ் பொதுவேட்பாளரை நிர்ணயம் செய்தல், வேட்பாளரை நிர்ணயம் செய்யும் குழுவை நிர்ணயம் செய்தல் தொடர்பில் தீர்மானிக்க இன்று யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல் நடந்தது. இதில், பொதுவேட்பாளரை ஆதரிக்கும் கட்சிகளான ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் மக்கள் கட்சி, தமிழ் தேசிய பசுமை இயக்கம் ஆகிய கட்சிகளும், மறுதரப்பாக கையெழுத்திட்ட 7 தனிநபர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது, எதிர்வரும் தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறக்கலாமென சிலரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.
முதலில் பொதுவேட்பாளரை ஆதரிக்கும் கட்சிகளின் தலைவர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. எனினும், அவர்களை தவிர்த்து, சிவில் சமூகத்தை சேர்ந்தவர்களைின் பெயர்களை பரிசீலிக்கலாமென குறிப்பிடப்பட்டது. காரணம், பொதுவேட்பாளராக களமிறங்குபவர் அடுத்த தேர்தலில் போட்டியிடக்கூடாதென ஒரு விதியையும் உருவாக்கியுள்ளதால், கட்சிகளின் தலைவர்களுக்கு அது பொருத்தமாக இருக்காது என கூறப்பட்டது.
இதையடுத்து, கிழக்கு, வடக்கை சேர்ந்த சிலரது பெயர்கள் தமிழ் பொதுவேட்பாளருக்காக பரிசீலிக்கப்பட்டது. கிழக்கு மாகாண முன்னாள் கல்வியமைச்சர் தண்டாயுதபாணி,
திருமதி. சந்திரகாசன் (தந்தை செல்வாவின் மருமகள்), சட்டத்தரணி இரட்ணவேல், மட்டக்களப்பு கல்லாறை சேர்ந்த முன்னாள் நீதிபதி திருமதி.சந்திரமதி, அம்பாறையை சேர்ந்த வரதராஜன், சசிகலா ரவிராஜ் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பொதுவேட்பாளரை இறுதி செய்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.