பெங்களூருவில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் புகுந்த இளைஞர் ஒருவர் தனது முன்னாள் காதலி என நினைத்து வேறொரு பெண்ணை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு, கோரமங்களா பகுதியில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் ஜூலை 24 அன்று நள்ளிரவில் நுழைந்த அபிஷேக் என்ற இளைஞர், பிஹாரைச் சேர்ந்த கிருத்தி குமாரி (24) என்ற பெண்ணை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து அபிஷேக் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் கிருத்தி குமாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட கிருத்தி குமாரிக்கும், அபிஷேக்குக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த அபிஷேக், அதே விடுதியில் தங்கியுள்ள வேறொரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அபிஷேக்குக்கு வேலை கிடைக்காததால் அண்மையில் அவரை விட்டு அந்த பெண் விலகியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அபிஷேக் தனது முன்னாள் காதலியை கொல்வதற்காக அவர் தங்கியுள்ள விடுதியில் நுழைந்ததாகவும், அங்கு அவர் தவறுதலாக கிருத்தி குமாரியை கொன்று விட்டு தப்பிச் சென்றதாகவும் போலீஸார் தெரிவிக்கின்றனர்.
அபிஷேக் மீது கோரமங்களா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் அவரை வலை வீசி தேடி வருகின்றனர்.