தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் இன்று (26) விளக்கமளித்திருந்தார்.
பொலிஸ் மா அதிபரை நீக்குவதற்கு விசேட நடைமுறையொன்று தேவை எனவும், பொலிஸ் மா அதிபர் தொடர்பான நிலைமையை ஜனாதிபதியால் கூட தீர்க்க முடியாது எனவும், தேவைப்பட்டால் நீதிமன்றில் தீர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் சபாநாயகரும் அரசியலமைப்பு பேரவையின் தலைவருமான மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபரை நியமிப்பதற்கான தீர்மானம் சரியானது, சட்டபூர்வமானது, அரசியலமைப்புக்கு உட்பட்டது மற்றும் நல்லெண்ண அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் பிரகாரம், அரசியலமைப்பு சபை மற்றும் பாராளுமன்றத்தினால் நியமிக்கப்பட்ட அதிகாரியை அப்பதவியில் இருந்து நீக்கினால், விசேட நடைமுறையொன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இல்லை என்றால் மீண்டும் உயர் நீதிமன்றத்தை அணுகி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்றார் அவர்.
பொலிஸ்மா அதிபரை நியமிப்பதில் சபாநாயகர் எடுத்த தவறான முடிவு முழு குழப்பத்துக்கும் வழிவகுத்தது என்ற கூற்றை மறுத்த சபாநாயகர், அரசியலமைப்பு விதிகளின்படி பொலிஸ்மா அதிபரை நியமிக்க வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்ததாக கூறினார்.
தற்போது எழுந்துள்ள பிரச்சினைக்கு ஜனாதிபதியால் கூட தீர்வு காண முடியாது என தெரிவித்த சபாநாயகர், நீதிமன்றத்தின் மூலமே தீர்வு காணப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.




