தமிழ் பொதுவேட்பாளராக இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவை நிறுத்துவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களக இந்த முயற்சிக்கான நகர்வுகள் தீவிரமாக இடம்பெறுவதை தமிழ் பக்கம் அறிந்தது.
தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டுமென ஆரம்பிக்கப்பட்ட முயற்சி அண்மைக்காலமாக தேக்கமடைந்திருந்தது. இந்த முயற்சியை முன்னகர்த்தி வந்த – குடிமைச்சமூகம் என இயங்கி வந்த நபர்கள்- பொதுவேட்பாளருக்கு ஆள் கிடைக்காமல் திண்டாடி வந்தனர். சிவாஜிலிங்கம், அனந்தி, பத்மினி சிதம்பரநாதன் என குண்டுச்சட்டிக்குள் குதிரையோடும் விதமாக பொதுவேட்பாளரை தேடிக்கொண்டிருந்தனர்.
இதனால், பொதுவேட்பாளர் விவகாரம் கிட்டத்தட்ட இழுத்து மூடப்படும் நிலைமையை அடைந்திருந்தது.
இந்த நிலைமையில், அரசியல் கட்சிகள் சிலவற்றினால் தமிழ் பொதுவேட்பாளர் விவகாரம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் சுமந்திரன் அணியினர் பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்த்து வந்தனர். சஜித் பிரேமதாச தரப்பினருக்காக சுமந்திரன் அணியினர் பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்ப்பதாக கருதப்படுகிறது. பொதுவேட்பாளர் விவகாரத்துக்காக ரணில் தரப்பிலிருந்து பெரும் தொகை சன்மானம் பரிமாறப்பட்டதாக குற்றம்சாட்டப்படும் நிலையில், பொதுவேட்பாளர் எதிர்ப்புக்காகவும் அதேவிதமாக சன்மானம் பரிமாறப்பட்டுள்ளதாக எதிர்த்தரப்பினர் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
இந்த பின்னணியில், பொதுவேட்பாளராக இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவை நிறுத்தலாம் என சில அரசியல்கட்சிகள் யோசனையை முன்வைத்து, அதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளன.
தற்போதைய சூழலில், தமிழ் பொதுவேட்பாளராக நிறுத்தப்படக்கூடிய அதிகபட்ச தகுதியை மாவை சேனாதிராசா மாத்திரமே கொண்டுள்ளதாக அந்த கட்சிகள் தெரிவிக்கின்றன. மாவையின் போராட்ட அரசியல் பங்களிப்பை யாருமே நிராகரிக்க முடியாது. ஏனைய யாருமே இதையொத்த பங்களிப்பை கொண்டிருக்கவில்லையென்ற நிலையில், மாவை சேனாதிராசாவே அனைத்து தரப்பினராலும் அதிகபட்சமாக ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய வேட்பாளர் என அவர்கள் கருதுகின்றனர்.
பொதுவேட்பாளர் விவகாரத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஒரு பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், மாவை சேனதிராசா பொதுவேட்பாளர் எனில், அவர்களின் எதிர்ப்பும் வலுவிழக்கும் என அந்த கட்சிகள் கருதுகின்றன.