திருகோணமலை வனப் பகுதியில் முற்றாக எரியூட்டப்பட்ட நிலையில் வாகனம் ஒன்றும், அதனகத்தே சடலம் ஒன்றும் திருகோணமலை உப்புவெளி பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
மொறவெள பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன மதவாச்சி வனப்பகுதியில் அதாவது, அனுராதபுரம்-திருகோணமலை பிரதான வீதியில் இருந்து 1 கிலோ மீட்டர் பயணிக்க கூடிய வனப் பகுதியில் இருந்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்தே இச் சடலம் மீட்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில்…
செல்வநாயகபுரம் பகுதியை சேர்ந்த ஜெயரூபன் (வயது-42) என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில், அவருடைய வீட்டில் இருந்து நபர் ஒருவரால் அழைத்து செல்லப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் உப்புவெளி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
அழைத்து செல்லப்படுவதற்கு முன்னர், ஜெயரூபன் மற்றும் அந்த நபருக்கிடையில் வாய் தகராறு ஏற்பட்டதாகவும், அவர்கள் கை சண்டை போட்டதாகவும், பின்னர் ஜெயரூபனை அவர் அழைத்து சென்றதாகவும், குடும்பத்தினர் பொலிஸிடம் தகவல் கொடுத்துள்ளனர.
அதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்களை உப்புவெளி பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது கிடைத்த தகவலின அடிப்படையில் குறித்த காட்டுப்பகுதியில் இருந்து பொலிஸார் ஜெயரூபனின் சடலத்தை மீட்டுள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலும் சிலர் தப்பி சென்றுள்ளதாகவும் திருகோணமலை உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் தப்பி சென்றவர்களை தாம் தேடி வருவதாகவும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என நம்புவதாகவும் ,சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை இடம்பெற்று வருவதாகவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




