தனது காதலனை திருமணம் செய்து கொள்வதற்காக தாயிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய யுவதி, காணாமல் போன நிலையில், அவரது சடலம் குமாரபுரம் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றொன்றிலிருந்து மூதூர் பொலிஸாரால் இன்று (05) மூதூர் நீதவான் மொஹமட் பௌஸான் முன்னிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மூதூர், தங்கநகர் பகுதியைச் சேர்ந்த நடேஸ் குமார் வினோதனி (25) என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 13ஆம் திகதி குறித்த யுவதி வீட்டிலிருந்து காதலனுடன் தலைமறைவாகியுள்ளார். மறுநாள், தொலைபேசியில் தனது தாயாரை தொடர்பு கொண்டு, காதலனை திருமணம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பின்னர், அவரது தொலைபேசி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த தாயார் அருணாசலம் சசிகலா, மூதூர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனிடையே, காணாமல் போன யுவதியின் ஆடைகள் என சந்தேகிக்கப்படும் ஆடைகள் பாழடைந்த கிணற்று பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. அந்த கிணற்றை ஜேசிபி இயந்திரத்தின் மூலம், காதலன் மூடியதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பில், மூதூர் பொலிசார், மூதூர் நீதவான் நீதிமன்றில் உண்மைகளை அறிக்கை செய்ததோடு நீதவான் முன்னிலையில் அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, பாழடைந்த கிணற்றிலிருந்து யுவதியின் சடலம் மீட்கப்பட்டது.
கொல்லப்பட்ட யுவதியின் காதலன் என கூறப்படும் நபர் கிளிவெட்டி பிரிவு இலக்கம் இரண்டில் வசிப்பவர் என்பதுடன் அவர் தற்போது அப்பகுதியில் இருந்து காணாமல் போயுள்ளார்.
சடலத்துடன் மீட்கப்பட்ட யுவதியுடையது என சந்தேகிக்கப்படும் சூட்கேஸில் காணப்பட்ட பல பொருட்களையும் பொலிஸார் சோதனை செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்ப உத்தரவிட்டதுடன் சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.



