சமூக நீதிக்கு எதிரான குளறுபடிகள் நிறைந்த நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் பாஜக அரசுக்கு எதிராக திமுக மாணவர் அணிச் சார்பில் வரும் ஜூலை 3-ஆம் தேதி வள்ளூவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருப்பதாக திமுக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை: “நீட் தேர்வு என்பது ஏழை-எளிய மாணவர்களை தகுதி என்ற பெயரில் மருத்துவக் கல்வி பயிலவிடாமல் ஓரங்கட்ட பாசிச பாஜக. அரசால் கொண்டுவரப்பட்ட தேர்வு. சமூகநீதிக்கு எதிரான தேர்வு முறை – சமத்துவம் இல்லாத தேர்வு முறை – கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பை மறுக்கக்கூடிய தேர்வு முறை – அவர்களது கல்வி உரிமைக்கு தடை போடும் தேர்வு முறை -அவர்களது மருத்துவக் கனவைச் சிதைத்து, “நீ டாக்டர் ஆக முடியாது” என்றும், “உனக்குத் தகுதியில்லை” என்றும் கூறி, தடுப்புச் சுவர் எழுப்புகிறது.
மேலும், நீட் தேர்வு என்பதே ஒன்றிய அரசின் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு சாதகமாகவும், வசதி படைத்தோருக்கும் மட்டுமே பயனடையும் வகையில் உருவாக்கப்பட்ட தேர்வு முறை. ஆள்மாறாட்டம் செய்வது – வினாத் தாள்களை திருடுவது – விடைத்தாள்களை மாற்றி வைப்பது – மதிப்பெண்கள் வழங்குவதில் குளறுபடிகள் என்று இத்தேர்வே முழுமையான மோசடியாக உள்ளது. இதனை முன்பே அறிந்ததால் தான் திமுக நீட் தேர்வை ஆரம்பம் முதல் எதிர்த்து வருகிறது.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழக மாணவர் அணியின் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட நிர்வாகிகள் மற்றும் கல்லூரி மாணவர் அமைப்பின் நிர்வாகிகள் அவர்களது தோழர்களுடன் பெருந்திரளாக பங்கேற்று, போராட்டத்தை வெற்றியடையச் செய்ய அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.