மது தொடர்பான அனைத்து தீமைகளுக்கும் திமுகதான் காரணம் என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டியுள்ளார்.
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்காத தமிழக அரசு மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் இடஒதுக்கீடு வழங்க முடியும் என முதல்வர் கூறியுள்ளார்.
வன்னியர்களின் வாக்குகளை வாங்கிய திமுக இடஒதுக்கீடு மூலம் பிரதிநிதிதுவம் பெறுவதை திமுக விரும்பவில்லை. இதற்கு திமுக சொல்லும் காரணம் சரியானது அல்ல.
கல்வி, வேலைவாய்ப்பில் பின் தங்கிய நிலையில் உள்ளதை புள்ளிவிவரங்களின் மூலம் இடஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று திமுக கூறியதை பாமக, வன்னியர் சங்கம் ஏற்காது.
இதற்காக நான் மாபெரும் போராட்டங்களை நடத்தியுள்ளேன்.
தற்போது வன்னியர் உள் இடஒதுக்கீடு வழங்க கோரி மாபெரும் போராட்டம் விரைவில் அறிவிக்கப்படும். 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கினால் வன்னியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் சிவ சங்கர் கூறியுள்ளார்.
இப்படி ஒரு பொய்யான தகவலை அவர் கூறியுள்ளார்.உயர்கல்வித்துறை வெளியிட்ட சுற்றரிக்கையில் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படாமல் இருந்தால் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு ( வன்னியர்) வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இது குறித்து முழுமையான தகவல்களை உள்வாங்கி பேசி இருக்கவேண்டும். தவறான தகவல்களை கூறி மக்களை குழப்பியுள்ளார்.
சாதிவாரி கணகெடுப்பை மாநில அரசு நடத்தமுடியாது என்று முதல்வர் கூறியுள்ளார்.
2008 ஆம் ஆண்டு புள்ளிவிவர கணக்கெடுப்பின்படி எந்த ஒரு மாநில, யூனியன் பிரதேசமோ புள்ளிவிவர கணக்கெடுப்பின் மூலம் முழுமையான விவரங்களை திரட்ட முடியும் என கூறப்பட்டுள்ளது.




