பேலியகொட கட்டுநாயக்க அதிவேக வீதியில் சட்டவிரோதமாக நுழைந்து நடந்து சென்ற இளைஞரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி பத்திரன நேற்று (13) உத்தரவிட்டுள்ளார்.
களனி, வனசல, பொசோன் வத்தை, பதுமங்க பகுதியைச் சேர்ந்த பிரமிள அன்டனி பலிஹக்கார என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நேற்று (13) பேலியகொட பொலிஸாரால் இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, குற்றம் சாட்டப்பட்டவர் குற்றத்தை ஒப்புக்கொண்ட போதே நீதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பேலியகொட கட்டுநாயக்க அதிவேக வீதியில் சட்டவிரோதமாக பிரவேசித்து கால்நடையாக சென்றமை மற்றும் சட்டப்பூர்வ காவலில் இருந்து தப்பிச் சென்றமை ஆகிய இரு குற்றச்சாட்டுகளை பேலியகொட பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கடந்த மே மாதம் 29ஆம் திகதி பேலியகெட கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் அத்துமீறி நுழைந்து கட்டுநாயக்கவை நோக்கி சுமார் 4 கிலோமீற்றர் தூரம் நடந்து சென்றதன் மூலம், 2008 ஆம் ஆண்டு 40 ஆம் இலக்க வீதிச் சட்டத்தின் 79 (1) பிரிவின் கீழ் முதலாவது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
அவர் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். பொலிஸ் ஜீப்பில் பயணித்த போது, அவர் ஜீப்பின் பின் கதவிலிருந்து இறங்கி, தப்பி ஓடி, இலங்கை தண்டனைச் சட்டம் 221 வது பிரிவின் கீழ் ஒரு குற்றத்தைச் செய்தார்.
இந்த இரண்டு குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்ட குற்றவாளியை அடையாளம் கண்டு தண்டனை வழங்குவதற்காக வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், அவரது கைரேகையை பதிவு செய்ய உத்தரவிட்டு வழக்கை அன்றைய தினம் ஒத்திவைத்தது.




