தொப்பி அணிந்து மாவட்ட செயலகத்துக்குள் பிரவேசித்த ஊடகவியலாளரை திட்டி தாக்கிய இரத்தினபுரி முன்னாள் மாவட்ட செயலாளர் மற்றும் இரத்தினபுரி பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி உட்பட 5 பேர் நேற்று உயர் நீதிமன்றத்தில் மரபுப்படி குறித்த ஊடகவியலாளரிடம் மன்னிப்பு கோரியுள்ளனர்.
முன்னாள் மாவட்டச் செயலாளர் மாலனி லொக்குபோதாகமவே, மாவட்ட செயலக உத்தியோகத்தர் அனுராத பண்டார, மற்றும் ஊடகவியலாளரை சரமாரியாக தாக்கிய இரத்தினபுரி காவல்துறையின் முன்னாள் பொறுப்பதிகாரி, இரத்தினபுரி காவல்துறையின் பொலிஸ் கான்ஸ்டபிள் சமீர, மற்றும் குருவிட்ட இராணுவ முகாமின் இராணுவ கோப்ரல் சேனாநாயக்க ஆகியோரே மன்னிப்பு கோரினர்.
பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் சரத் விமலரத்ன, 2019 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
மாவட்ட செயலகத்தினால் அழைக்கப்பட்ட மேற்படி ஊடகவியலாளர் தொப்பி அணிந்து வளாகத்திற்கு வந்த போது மேற்படி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அவர் தொப்பியை அணிந்து வளாகத்திற்குள் நுழைந்தபோது, கான்ஸ்டபிள் மற்றும் இராணுவ கோப்ரல் அதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர், பின்னர் அவர் தொப்பியை அகற்றினார். வளாகத்திற்குள் நுழைந்த அவர் மீண்டும் தொப்பியை அணிந்திருந்தார், பின்னர் தரப்பினர் மீண்டும் தங்கள் ஆட்சேபனையை வெளிப்படுத்தினர் மற்றும் வாக்குவாதம் பத்திரிகையாளர் மீது தாக்குதலுக்கு வழிவகுத்தது.
பின்னர் அவர் கைது செய்யப்பட்டு இரத்தினபுரி பொலிஸாருக்கு அழைத்துச் செல்லப்பட்டு மாலை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டார்.
அதன்படி, இந்த சம்பவத்தை எதிர்த்தும் இழப்பீடு கோரியும் உயர் நீதிமன்றத்தில் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதியரசர்கள் முர்து பெர்னாண்டோ மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் முன்னிலையில் நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிரதிவாதிகள் ஐவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மாதவ தென்னகோன், மனுதாரரிடம் மன்னிப்பு கோருவதற்கு தயாராக இருப்பதாக நீதிமன்றில் அறிவித்தார்.
குறித்த ஊடகவியலாளருக்கு எதிராக இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில் பிரதிவாதிகளால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கும் வாபஸ் பெறப்படுவதாகவும் அவருக்கு எதிராக மேலதிக நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான ச்ட்டத்தரணிகள், அதன்பிறகு பிரதிவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம் என நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.



