பொலன்னறுவை வெள்ள தேசிய பூங்காவின் ஹந்தபன்வில வனப் பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த காட்டு யானைகளின் ஏழு சடலங்கள் நேற்று (26) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் சுற்றாடல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த காட்டு யானைகளில் 8, 9, 10 வயதுடைய ஐந்து இளம் யானைகளும், 30 மற்றும் 35 வயதுடைய இரண்டு காட்டு யானைகளும் அடங்குகின்றன.
ஹந்தபன்வில ஏரியின் கால்வாய் பகுதியில் ஜப்பானிய ஜபரா உள்ளிட்ட பல்வேறு செடிகள் நிரம்பியுள்ளதாகவும், கால்வாயில் பல இடங்களில் 7 யானைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்ட வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யானைகளின் உடல்கள் அழுகிய நிலையில் காணப்பட்டன.
கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையினால் ஹந்தபன்வில குளம் நிரம்பி கால்வாய் ஊடாக மகாவலி ஆற்றில் நீர் பாய்ந்தது. யானைகள் ஓடையை கடக்கும் போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, ஜப்பனிய ஜபரா உள்ளிட்ட தாவரங்களில் சிக்கி இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பொலன்னறுவை வனஜீவராசிகள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் டபிள்யூ.எல்.பி. எதிரிசிங்கவிடம் தொலைபேசி மூலம் வினவியபோது, உயிரிழந்த ஏழு காட்டு யானைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், பிரேத பரிசோதனையை மேற்கொள்ளுமாறு உரிய கால்நடை வைத்தியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.