எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படும் மூன்று பிரதான வேட்பாளர்களும், தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் சில உத்தரவாதங்களை வழங்கியுள்ளதாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இது தொடர்பில் மத்தியகுழுவில் சில தகவல்களை வெளிப்படுத்தினார்.
சில தரப்பினரால் முன்னெடுக்கப்படும் தமிழ் பொதுவேட்பாளர் என்ற பலனற்ற முயற்சிக்கு தமிழ் அரசியல் கட்சிகள் பெரியளவில் ஆதரவளிக்கவில்லை. இலங்கை தமிழ் அரசு கட்சி தனது தீர்மானத்தை 2 வாரங்களில் தெரிவிப்பதாக குறிப்பிட்டிருந்தது. நேற்று (19) வவுனியாவில் நடந்த மத்திய செயற்குழு கூட்டத்தில் தமிழ் பொதுவேட்பாளர் விவகாரம் அலசப்பட்டது.
தமிழ் பொதுவேட்பாளர் விவகாரத்தை ஒரு பேரம் பேசும் உத்தியாக மேற்கொள்ளலாம் என கொழும்புக்கிளை தலைவர் கே.வி.தவராசா குறிப்பிட்டார். பொதுவேட்பாளரை தயார்படுத்திக் கொண்டு, பிரதான வேட்பாளர்களுடன் பேச்சு நடத்தி, அவர்கள் சாதகமான பதிலளிக்கிறார்களா என்பதன் அடிப்படையில் அடுத்த கட்டத்தை தீர்மானிக்கலாம் என்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனும் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரித்தார். பிரதான தென்னிலங்கை கட்சிகளின் தலைவர் ஒருவரை ஆதரிப்பதெனில் அவர் சில வாக்குறுதிகள் வழங்க வேண்டுமென்றார். தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்கள் விவகாரங்களை குறிப்பிட முடியாதென்றால், 2 நாடுகளின் தூதர்கள் முன்னிலையில் தமக்கு உத்தரவாதம் தர வேண்டுமென்றார்.
இதற்கு முன்னதாக நடந்த உரையாடல்களில்- ஒஸ்லோ பிரகடனத்தை சிதைக்க இடமளிக்காதீர்கள் என இரா.சம்பந்தன் குறிப்பிட்டதாக வெளியான செய்தியின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளானது. பொதுவேட்பாளர் நல்ல யோசனை, ஆனால் அதை நிதானமாக கையாள வேண்டுமென்றே இர.சம்பந்தன் குறிப்பிட்டதாகவும், ஒஸ்லோ பிரகடனம் குறித்து தன்னிடம் பேசவில்லையென்றும் சிறிதரன் குறிப்பிட்டார். இதை உறுதி செய்ய, அடுத்த அரசியல்குழு கூட்டத்தை சம்பந்தன் இல்லத்தில் கூட்டி, அங்கே கேட்டுக்கொள்ளலாம் என்றார்.
இந்த செய்தியை கசிய விட்டதாக கருதப்பட்ட எம்.ஏ.சுமந்திரன் விளக்கமளித்த போது, பத்திரிகைகளில் வெளியான செய்தியை போல ஆணித்தரமாக இந்த விவகாரத்தை குறிப்பிவில்லை. ஒஸ்லோ பிரகடனமும் உள்ளதென கூறினார் என குறிப்பிட்டார்.
மாவை, சேனாதிரசா, பா.அரியநேத்திரன் ஆகியோர் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரித்தனர். அதிலும், அரியநேத்திரன் அதை தீவிரமாக வலியுறுத்தினார். சமூகத்தில் மிகப்பலர் அதை ஆதரிக்கும் போது, தமது கட்சி மாத்திரம் விதிவிலக்காக செயற்பட கூடாதென்றார். எவ்வாறாயினும், கட்சி இந்த விவகாரத்தில் உடனடியாக முடிவெடுக்காத போதும், இந்த விவகாரத்தில் யார் யார் என்ன நிலைப்பாட்டை வலியுறுத்தினார்கள் என்பது எழுத்துபூர்வமாக பதியப்பட வேண்டுமென்றார். தான் பொதுவேட்பாளரை வலியுறுத்தினேன் என்பது கூட்ட அறிக்கையில் பதிவு செய்யப்பட வேண்டுமென்றார்.
பொதுவேட்பாளர் விவகாரத்தில் எம்.ஏ.சுமந்திரன் மௌனமாக இருந்த போது, அவரையும் கருத்து தெரிவிக்குமாறு மாவை சேனாதிராசா கேட்டுக்கொண்டார்.
அப்போது கருத்து தெரிவித்த சுமந்திரன்- ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படும் மூன்று பிரதான வேட்பாளர்களும் தன்னுடன் பேச்சு நடத்தி, தாம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை விவகாரத்தில் என்ன செய்வார்கள் என தெரிவித்ததாக குறிப்பிட்டார். நல்லாட்சி அரசில் இனப்பிரச்சினை தீர்வுக்காக முன்னெடுத்த அதே நடவடிக்கைகளை தொடர்வேன் என தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாகவும், அப்போது நீங்கள் ஒன்றுமே செய்யவில்லையென தான் தெரிவித்ததாகவும் கூட்டத்தில் குறிப்பிட்டார்.
13வது அரசியலமைப்பை அமுல்ப்படுத்தி தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பேன் என சஜித் பிரேமதாசா வாக்குறுதியளித்ததாகவும் தெரிவித்தார்.
அநுரகுமார திசாநாயக்க பேச்சு நடத்திய போது, தாங்கள் மாகாணசபை முறைமைக்கு எதிரானவர்கள் என்றும், ஆனால் பெரும்பாலான தமிழர்கள் அது தேவையென ஆதரித்தால், மாகாணசபை முறைமையை அமுல்படுத்த தயாராக இருப்பதாக தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.
தமிழ் பொதுவேட்பாளர் விவகாரத்தில் உடனடியாக தீர்மானம் எடுப்பதில்லையென இலங்கை தமிழ் அரசு கட்சி நேற்று தீர்மானித்தது.




