25.5 C
Jaffna
January 13, 2025
Pagetamil
தமிழ் சங்கதி முக்கியச் செய்திகள்

‘பொதுவேட்பாளரில் அவசரப்படாதீர்கள்’: தமிழ் கட்சிகளுக்கு அமெரிக்க தூதர் ஆலோசனை!

வெளிநாட்டு தூதரகங்களில் பணம்பெற்று அரசசார்பற்ற நிறுவனங்களை போல- சிவில் சமூகமென்ற பெயரில் இயங்கும் குழுக்களினால் முன்னெடுக்கப்படும் தமிழ் பொதுவேட்பாளர் விவகாரத்தின் ஆபத்துக்களை இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங்கும் அவதானத்துடன் எச்சரித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென தனது வடக்கு விஜயத்தின் போது, தன்னை சந்தித்த மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளார்.

கடந்த 2 நாட்களின் முன்னர் அமெரிக்க தூதர் ஜூலி சங் வடக்கிற்கு விஜயம் செய்தார்.

தற்போது தமிழ் அரசியல் பரப்பில் தமிழ் பொதுவேட்பாளர் விவகாரம் பேசப்பட்டு வருகிறது. தமிழ் அரசியல் கட்சிகள் பெரும்பாலானவை பொறுப்புணர்ந்து, இந்த பொதுவேட்பாளர் கயிற்றை விழுங்கவில்லை.

வெளிநாட்டு தூதரகங்களில் பணம் பெற்று, சிவில் சமூகமென்ற பெயரில் இயங்கும் அரசசார்பற்ற நிறுவன பாணி நபர்கள், பெரும் பணச்செலவில் பொதுவேட்பாளர் கயிற்றை சமூகத்தை விழுங்க வைக்க பகீரத பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் அரச புலனாய்வுத்துறை, ராஜபக்ச தரப்பின் பின்னணியில் இயங்குபவர்களும் கைகோர்த்து, தமிழ் பொதுவேட்பாளர் விவகாரத்தை பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

ராஜபக்ச தரப்பின் பின்னணியில் செயற்படும் ஒருவரின் பெரும் நிதி அனுசரணையில் அண்மையில் யாழ்ப்பாணத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் களியாட்ட சந்திப்பொன்றும் நடத்தப்பட்டிருந்தது. கிழக்கிலங்கை வரை வாகனங்களை அனுப்பி, அங்கிருந்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை அழைத்து வந்து, மதுபான விருந்துகளும் நடத்தப்பட்டு தமிழ் பொதுவேட்பாளர் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் சினிமாவில்தான் இந்தவகை காட்சிகளை பார்த்திருப்போம். மதுவை ஊற்றிக்கொடுத்து, வாக்குறுதிகளை பெறுவது. மதுபோதையிலாவது நமது அரசியல் கட்சிகள் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரித்து பேசுவார்கள், அதை சமூகத்தில் விற்று விடலாமென இந்த தரப்புக்கள் கணக்குப் போட்டார்களோ என்னவோ!

வடக்கு கிழக்கில் பல சிவில் அமைப்புக்கள் தன்னலம் கருதாது செயற்பட்டாலும், அரசார்பற்ற நிறுவனங்களை போல செயற்பட்டு, தூதரகங்களில் பணம் பெற்று இயங்கும் தரப்புக்கள்தான் அவற்றையெல்லாம் கட்டுப்படுத்தும்- வழிப்படுத்தும்- சிவில் சமூக கருத்துக்களை பிரதிபலிப்பவர்களாக உள்ளனர் என்பது துயரமான உண்மை. தமிழ் மக்கள் மத்தியில் முறையான சிவில் கட்டமைப்பின் போதாமைக்கு இதுதான் அடிப்படை காரணம்.

இந்தவகையில் அமெரிக்க தூதர் யாழ்ப்பாணம் வந்த போது, சிலர் அவரை சந்தித்துள்ளனர். வடக்கு கிழக்கு நிலவரம் பற்றி அமெரிக்க தூதருடன் பேசச் சென்றவர்களில் ஒருவர் கனடாவை சேர்ந்தவர். அப்படியுள்ளது நிலவரம்.

இவர்களில் சிலர்- தமிழ் பொதுவேட்பாளர் சமூகத்துக்கு அவசியமானது, அதை குறியீட்டு ரீதியாக பிரயோகித்து பார்க்கலாம், தமிழ் அரசியல் கட்சிகள், மக்களை அந்த வழிக்கு கொண்டு வந்து விட்டோம் என கயிறு கொடுத்துள்ளனர்.

அமெரிக்க தூதர் பழுத்த இராஜதந்திரியல்லவா- அவர் ஆர்வமாக கேட்பதை போல கெட்டு விட்டு வந்து விட்டார்.

பின்னர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் 5 நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர் சந்தித்தார். யாழ்ப்பாணத்தில் த.சித்தார்த்தன், சி.சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரையும், தனித்தனியாக மற்றும் இருவரையும் சந்தித்தனர்.

இந்த சந்திப்புக்களின் போது, தமிழ் பொதுவேட்பாளர் விவகாரத்தில் மக்கள் பிரதிநிதிகள் நிதானமாக- பொறுப்பாக முடிவெடுக்க வேண்டுமென அழுத்திக் கூறியுள்ளார்.

யழ்ப்பாணத்தில் த.சித்தார்த்தன், சி.சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரை சந்தித்த போது, தமிழ் பொதுவேட்பாளர் விவகாரத்தை குறியீடாக பயன்படுத்தலாமென அரசசார்பற்ற நிறுவன நபர்கள் கூறிய கருத்தை பற்றியும் தூதர் கேட்டுள்ளார்.

பொதுவேட்பாளர் விவகாரத்தை தான் ஆதரிக்கவில்லையென சாள்ஸ் நிர்மலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் அமெரிக்க தூதரிடம் தெரிவித்துள்ளனர்.

பொதுவேட்பாளரை ஆதரிப்பதாக சி.சிறிதரன் கூறினார். ஆனால், கட்சி எடுக்கும் தீர்மானமே தனது நிலைப்பாடாக இருக்குமென்றார்.

பொதுவேட்பாளரை கோட்பாட்டு ரீதியாக ஆதரித்தாலும், அதன் பலவீனங்கள்- சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வரை அந்த தீர்மானத்தை ஆதரிக்க முடியாதென த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

தனது பெயரை குறிப்பிட வேண்டாமென கேட்டுக்கொண்ட மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர், மன்னாரில் விடுதியொன்றில் அமெரிக்க தூதரை சந்தித்தார். அவரும் பொதுவேட்பாளரின் பின்னாலுள்ள அபாயம், சந்தேகங்கள் தீராதவரை ஆதரிக்க முடியாதென்றார்.

இந்த சந்திப்புக்களின் போது, பொதுவேட்பாளர் தொடர்பில் கட்சிகள் உணரும் அபாயத்தை பற்றியும் அமெரிக்க தூதர் கேட்டறிந்தார்.

“தமிழ் பொதுவேட்பாளரை எத்தனை மக்கள் ஆதரிப்பார்கள் என்பது தெரியாமல், அப்படியொருவரை நிறுத்தி, அவர் மிகக்குறைந்த வாக்குகளை பெற்றார் என்றால், அவரை நிறுத்திய நாங்கள் மக்களின் உரிமை விவகாரமாக நாடுகளிடம் பேச வந்தால்- அதிகமேன், நீங்கள்-அமெரிக்கா கூட என்ன சொல்வீர்கள்? அரசு மீது அழுத்தம் கொடுக்க நீங்கள் விரும்பாவிட்டால், உங்கள் மக்களே இப்பொழுது நிலைப்பாட்டை மாற்ற ஆரம்பித்து விட்டார்கள். நீங்கள் மட்டும் ஏன் இந்த விடயங்களை பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என கேட்க மாட்டீர்களா?“ என தமிழ் எம்.பிகள் சிலர் கேட்டுள்ளனர்.

அமெரிக்க தூதர் அதற்கு அர்த்தபுஸ்டியான மௌனப்புன்னகையொன்றுடன், ஆமோதித்து தலையசைத்துள்ளார்.

பொதுவேட்பாளரின் பின்னாலுள்ள அபாயங்களை புரிந்து கொண்ட அமெரிக்கத் தூதர், இந்த விவகாரத்தில் சில உதிரிக்குழுக்களின் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும், மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பாக செயற்பட வேண்டுமென அழுத்திக் கூறியுள்ளார்.  அரசியல்ரீதியாக பலவீனப்படுத்தும் ஆபத்தான- ரிஸ்க்கான- முடிவுகளிற்கு அவசரப்பட வேண்டியதில்லையென குறிப்பிட்ட அவர், பொறுமையாக, களச்சூழலை அவதானித்து முடிவெடுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இறக்குமதியாகும் வாகனங்களுக்கான வரி விபரம்

Pagetamil

பதவி விலகுவதாக அறிவித்தார் கனடா பிரதமர்: அமெரிக்காவின் புதிய மாநிலமாக இணைய ட்ரம்ப் அழைப்பு!

Pagetamil

முல்லைத்தீவில் கரையொதுங்கியவர்கள் உண்மையான அகதிகளா என ஆராய்கிறதாம் அனுர அரசு!

Pagetamil

முக்கிய தீர்மானங்கள் இல்லை… வழக்கம் போல கூடிக்கலைந்தது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி!

Pagetamil

அனுர ஜன.13- 17 வரை சீன விஜயம்!

Pagetamil

Leave a Comment