தமிழ் பொதுவேட்பாளருக்கு இடையூறாக வந்த தமன்னா… பயில்வான் ரங்கநாதன் பாணி ஆய்வாளர்களின் முன்னாலுள்ள சவால்கள்!

Date:

♦யோ.கர்ணன்

தமிழ் பொதுவேட்பாளரை எல்லோரும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டுமென கறாரான சுதியில் பிரச்சாரத்தை ஆரம்பித்த அரசியல் ஆய்வாளர்கள், குடிமைச்சமூகத்தினர் தற்போது சுருதியை மாற்றி கண்ணீர் வடித்து காவியம் பாட ஆரம்பித்துள்ளனர்.

தமிழினத்துக்காக சிந்தித்தது தவறா? தமிழினத்தை ஒற்றுமைப்படுத்த முயன்றது தவறா?, அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கென படித்ததை நினைவூட்டியது தவறா?… என மூக்குச்சிந்தியபடி கட்டுரைகள் எழுத ஆரம்பித்துள்ளனர்.

போதாதற்கு, கடந்த சில நாட்களின் முன்னர் குடிமைச்சமூகத்தினர் (இங்கே குடிமைச்சமூகம் எதுவுமில்லை. தூதரகங்களில் நிதி வாங்கி, அரசசார்பற்ற நிறுவனங்களை போல இயங்குபவர்களே உள்ளனர். எனினும், அவர்கள் தம்மை குடிமைச்சமூகம் என அறிமுகப்படுத்துவதால், அவ்வாறே குறிப்பிடுகிறேன்) ‘சூம்‘  கலந்துரையாடல் நடத்தி, பொதுவேட்பாளரை எதிர்ப்பவர்களை சந்தித்து, ‘மண்டையை கழுவவும்‘ திட்டமிட்டுள்ளனர். அதாவது, பொதுவேட்பாளர் தொடர்பாக முன்வைக்கப்படும் விமர்சனங்களை பரிசீலித்து, தவறுகளை திருத்திக் கொள்ள தயாரில்லாமல், விமர்சகர்களை சந்தித்து பேசி, சமரசம் செய்து கொள்ள தீர்மானித்துள்ளனர்.

இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.

தமிழ் பொதுவேட்பாளரை எதிர்ப்பவர்கள், தனிப்பட்ட தாக்குதலில் ஈடுபடுவதாக குடிமைச்சமூகத்தினர் அபிப்பிராயப்பட்டுள்ளனர். எதிர்ப்பில் வன்மம் இருப்பதாகவும் குமுறுகிறார்கள்.

இந்த விமர்சனங்களின் பெரும் பகுதி தமிழ் பக்கத்தை நோக்கியே வைக்கப்பட்டதை அறிவோம். நமது எதிர்ப்பு தனிப்பட்ட தாக்குதல்களோ, வன்மமோ அல்ல. தமிழ் பொதுவேட்பாளர் என்ற பலனற்ற அரசியல் நகர்வின் மூலம், தமிழ் சமூகத்தை மேலும் படுகுழியில் தள்ளிவிடக்கூடாதென்ற பதைபதைப்பே தமிழ்பக்கத்தின் எதிர்வினைகள்.

பொதுவேட்பாளர் கோட்பாடு தோல்வியடைந்தால் ஏற்படும் விளைவுகளை பலரும் எச்சரித்து வரும் நிலையில், பொதுவேட்பாளர் பிரச்சாரகர்கள் அதற்கு இதுவரை தர்க்கரீதியாக பதிலளிக்கவில்லை. மாறாக, ஊர் மதகில் உட்கார்ந்து அரசியல் பேசுபவர்களை போல விளக்கமளித்துள்ளனர். ‘இப்பொழுது மட்டும் என்ன வெற்றியடைந்த இனமாகவா இருக்கிறோம்?, மீண்டுமொரு முறை தோல்வியடைந்தால் என்ன’ என எந்த பொறுப்புணர்வுமில்லாமல் பதிலளித்துள்ளனர்.

இந்த அரசியல் ஆய்வாளர்கள், பொறுப்புணர்ந்துதான் இவ்வாறு பேசுகிறார்களா என்பது புரியவில்லை. தமிழ் சமூகம் தோல்வியடைந்தாலும் பரவாயில்லை, இந்த அரசியல் உத்தியை பரீட்சித்து பார்க்கலாம் என்ற அங்கீகாரத்தை எவ்விதம், யாரிடமிருந்து இவர்கள் பெற்றார்கள்?. ஆளாளுக்கு வந்து விளையாடிப் பார்க்க இது என்ன முற்றவெளி மைதானமா?

இந்த வகை அரசியல் ஆய்வாளர்கள் தற்கொலை அரசியல் பரீட்சார்த்த முயற்சிகளை தத்தம் குடும்பங்கள் அளவில் செய்வதை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். (ஆனால், அதுவும் தவறானதே). ஆனால், அதை ஒரு சமூகமாக செய்ய வலியுறுத்துவதும், அதற்காக பிரச்சாரம் செய்வதும் எவ்வளவு பெரிய கொடுஞ்செயல்?

கடந்த நல்லாட்சி ஆட்சிக்காலத்தில், இதேவிதமான அணுகுமுறையையே எம்.ஏ.சுமந்திரனும் கையாண்டார். இத்தனை வருடங்கள் பல தரப்பும் கையாண்டு தோல்வியடைந்தார்கள், எனக்கும் ஒரு ஐந்தாண்டை தாருங்களேன் என்ற பாணியிலேயே அவர் பேசினார்.

அப்போது பக்கம் பக்கமாக கட்டுரை எழுதி சுமந்திரனை கண்டித்த ஆய்வாளர்கள், இப்பொழுது தாமும் தோற்று தோற்று விளையாடப் போவதாக அடம்பிடிக்கிறார்கள். அப்பொழுது சுமந்திரனையும் கண்டித்தோம். இப்பொழுது ஆய்வாளர்களையும் கண்டிக்கிறோம். இதுதான் விமர்சனம்.

இதே ஆய்வாளர்கள்தான் சில வருடங்களின் முன்னர் தமிழ் மக்கள் பேரவைக்காக கட்டுரை எழுதி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அந்த தமிழ் மக்கள் பேரவை எங்கே? தமிழ் மக்கள் பேரவை ஏன் தோற்றது? அந்த தோல்வியில் தமது பங்கு என்னவென எந்த ஆய்வாளர் பொறுப்புக் கூறினார்?

பொதுவேட்பாளரை எதிர்ப்பவர்கள் ஏதோ ஒரு நிகழ்ச்சி நிரலில் சந்திப்பதாகவும், எதிர்ப்பின் பின்னணியில் சதிக் கோட்பாடு உள்ளதாகவும் வேறு வியாக்கியானம் செய்துள்ளனர். தம்மை கேள்வி கேட்பவர்களையும், தம்மை அம்பலப்படுத்துபவர்களையும் இவ்விதம் துரோகி முத்திரை குத்துவது தமிழ் சமூகத்தின் அடிப்படை இயல்பு. அதனால் அந்த குற்றச்சாட்டை கண்டுகொள்ளத் தேவையில்லை.

இருந்தாலும், பொதுவேட்பாளர் தரப்பிலேயே உலகமகா மலைவிழுங்கி மகாதேவன்கள் இருக்கிறார்கள் என்பதை குறிப்பிட சிறிய விளக்கமளிக்க வேண்டும்.

பொதுவேட்பாளரை எதிர்க்கும் யாருமே எந்த தரப்பின் நிகழ்ச்சி நிரலிலும் இயங்குவதாக சுயாதீனமாக எந்த தகவலுமில்லை. ராஜபக்சக்களுடன் கடந்த மாதம் வரை தேன்நிலவு கொண்டாடியவர்களும் இல்லை.

ஆனால், பொதுவேட்பாளரை ஆதரிக்கும் முகாமில் இந்த வித மலைவிழுங்கி மகாதேவன்கள் தாராளமாக இருக்கிறார்கள். அந்த தரப்பிலுள்ள வெகுசில ஆய்வாளர்களும், அதிலுள்ள சில சிவில் சமூக உறுப்பினர்களும் கோட்பாட்டின் அடிப்படையில்தான் பொதுவேட்பாளரை கோருகிறார்கள் என நம்புகிறேன். ஆனால், அந்த கோட்பாட்டை பிரயோகிப்பதற்கான காலப்பொருத்தம் தற்போதில்லையென கடந்த  இரண்டு கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளேன்.

அந்த காலப்பொருத்தம் இல்லாவிட்டால் என்ன, தோற்றால் தோற்கிறோம் என பதிலுக்கு அடம்பிடிக்கிறார்கள்.

பொதுவேட்பாளருக்குரிய காலச்சூழல் இது இல்லை… அரசியல்வாதிகள், சிவில் சமூகத்தினர் என பலரும் பணக்கொடுக்கல் வாங்கலின் அடிப்படையில் இயங்குவதால், மக்கள் இந்த சுலோகத்தை நம்பமாட்டார்கள் என குறிப்பிட்டிருந்தோம். அதுதான் தற்போது நடக்கிறது.

பொதுவேட்பாளர் விவகாரத்தை கோட்பாட்டு ரீதியாக ஆதரிக்கும் சில ஆய்வாளர்கள், குடிமைச்சமூகத்தை- பணப்பரிமாற்றத்தின் மூலம் பொதுவேட்பாளரை ஆதரிப்பவர்கள் தமது தரப்புடன் இணைந்துள்ளனர் என்பதே இப்பொழுது நடந்துள்ள விபத்து. தெரிந்தோ தெரியாமலோ எல்லோரும் அதில் சங்கமித்து விட்டனர். இதனை சுட்டிக்காட்டினால் வன்மம், தனிமனிதர் தாக்குதல் என மூக்கால் அழுகிறார்கள்.

பொதுவேட்பாளருக்காக வவுனியாவில் நடந்த கூட்டத்தை ஏற்பாடு செய்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த அரசியல் ஆய்வாளர் ஒருவர், அந்த கூட்டத்தில் 144,000 ரூபா செலவழித்த செலவை சுமப்பது சிரமமென குறிப்பிட்டு, கூட்டத்திற்கு வந்தவர்களிடம் நிதி வசூலித்தார். தனிமனிதனாக அந்த சுமையை சுமப்பதிலுள்ள சிரமம் புரிந்து கொள்ளக்கூடியதே. ஆனால் அதற்கடுத்த கூட்டம், யாழில் நடந்தது. கிழக்கு மாகாணம் உள்ளிட்ட பல பகுதிகளிருந்து வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு, யாழ்ப்பாணத்திலுள்ள நட்சத்திர விடுதியில் மதுவிருந்துடன் களியாட்ட பாணியில் நடந்த செலவின் பின்னணி என்னவென்பதை நமது ஆய்வாளர்கள் அறிந்திருக்கமாட்டார்கள் என நம்ப முடியாது. அப்படி அறிந்திருக்கவில்லையெனில், அவர்கள் வாராந்தம் கட்டுரைகள் எழுதி இந்த சமூகத்தில் என்ன பயனை காணப்போகிறார்கள் என புரியவில்லை. பயில்வான் ரங்கநாதனை போல சொந்த வீட்டில் என்ன நடக்கிறதென தெரியாமல், ஊர் வீட்டு வம்புகளை அலசுபவர்களா நமது ஆய்வாளர்களும்?

யாழ்ப்பாணத்தில் நடந்த பொதுவேட்பாளர் கூட்டத்திற்கு நிதி அனுசரனை வழங்கியவர்- ராஜபக்சக்களுக்காக செயற்பட்ட ஒருவர். இராணுவ உளவுத்துறையுடன் மிக நெருக்கமாக செயற்பட்டவர். கடந்த ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாணத்தில் கோட்டாபயவுக்காக செயற்பட்டவர். அவரை அறிந்தவர்கள் எல்லோருக்கும் அவரது இந்த தொடர்புகள் தெரியும்.

இதிலென்ன தனிமனித தாக்குதல் உள்ளது?

பொதுவேட்பாளரை ஆதரிக்கும் கட்டுரையாளர்கள் பின்வரும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்.

1.பொதுவேட்பாளரை கோரும் தமது தரப்பில் ராஜபக்ச தரப்பினர், பணத்துக்காக செயற்படும் கட்டுரையாளர்கள், சிவில் சமூகத்தினர் இருக்கிறார்கள் என்பது தெரியாதா?. தமிழ் மக்களின் போராட்டத்துடன் தொடர்புடைய எந்த விவகாரத்திலும் தூதரக, அரசசார்பற்ற நிறுவனங்களின் பணத்தை பெற்றுக்கொண்டு செயற்பட்டதில்லையா?

2.ராஜபக்ச தரப்பிற்காக செயற்பட்ட ஒருவரின் பணத்தில் கூடி, தமிழ் தேசிய நலனின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கலாமென நம்புகிறீர்களா?

3.இந்த ஏற்பாட்டு குழுவிலுள்ள- பொதுவேட்பாளர் விவகாரத்தை தொடர்ந்து மேடை போட்டு பிரசங்கிக்கும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒருவர்- பொதுவேட்பாளர் கோசம் எழுந்த காலத்தில் முக்கால் கோடி ரூபா செலவழித்து கார் வாங்கியதும், அவரது திடீர் வருமானத்தினால் நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவு சந்தேகமடைந்து, வங்கிக் கணக்கை முடக்கியதும் நமது ஆய்வாளர்கள் அறிந்த சங்கதிதான். எந்தவொரு குறிப்பிடத்தக்க வேலையும் இல்லாத ஒருவர்- பொதுவேட்பாளர் பேச்சு நடக்கும் காலப்பகுதியில் திடீர் கோடீஸ்வரர் ஆனது இயல்பான சந்தேகத்தை கிளப்பாதா? இவற்றை சுட்டிக்காட்டுவது தனிமனித தாக்குதலா?

இதெல்லாம் தனிநபர்கள் சார்ந்தது, நாம் கொள்கையினடிப்படையில் செயற்படுகிறோம் என்றால், அவர்கள் நிச்சயம் கொள்ளைக்கூட்டத்தின் அங்கத்தினராகவே இருப்பார்கள்.

பொதுவேட்பாளர் விவகாரத்தில் உள்ள சந்தேகங்களை தீர்க்க,

மேற்படி ராஜபக்ச தரப்பினர், பொதுவேட்பாளர் கோசத்துடன் பணக்காரர்கள் ஆனவர்களை பகிரங்கமாக விலக்கி, தனித்து செயற்பட தயாராக இருக்கிறீர்களா?

ராஜபக்சவுக்காக செயற்படுபவர்களின் விருப்பமும், தமிழ் சிவில் சமூகத்தின் விருப்பமும் எந்தப் புள்ளியில் சந்தித்தது?

இப்பொழுது ஆய்வாளர்கள், சிவில் சமூகத்தினரின் முன்னாலுள்ள உடனடித் தேவை- தமது தரப்பிலுள்ள ராஜபக்சக்களின் செல்லப்பிள்ளைகளையும், தூதரக நிதியில் பொதுவேட்பாளருக்காக கோசமிடும் திடீர் கோடீஸ்வர கட்டுரையாளர்களையும் பொதுவேட்பாளர் கட்டமைப்பிலிருந்து வெளியேற்ற வேண்டும். அல்லது, நாம் வெளிப்படுத்திய தகவல்கள் தவறானவை என குறிப்பிட்டு, அந்த தரப்பினர் கொள்கைக்குன்றுகள் என சான்றளிக்க வேண்டும்.

இந்த சூழலே தமிழ் பொதுவேட்பாளர் கோசத்தின் பின்னாலுள்ளவர்களை தெளிவாக வகிடுபிடிக்கும். தமது தரப்பிலுள்ள கோடாரிக்காம்புகளை வெளிப்படுத்த கட்டுரையாளர்களும், சிவில் சமூகத்தினரும் துணிந்தால்- அவர்கள் கொள்கைக்காகவே களமிறங்கினார்கள் என நம்பலாம். அந்த துணிச்சல் இல்லாவிட்டால்- அனைவருமே தூதரக, ரஜபக்சக்களின் நிதியில் இயங்குபவர்கள்- அருண் சித்தார்த் வகையறாக்கள் என கருதலாம்.

இதுதவிர, பொதுவேட்பாளருக்காக பிரசாரம் செய்பவர்கள் மேலும் சில பொறுப்புடையவர்களாகிறார்கள்.

“தமிழர்கள் இப்பொழுது வெற்றியடையும் தரப்பா, பொதுவேட்பாளரை களமிறக்கி நாமும் ஒருமுறை முயற்சிக்கிறோம். தோற்றால் தோற்கட்டும்“ என முற்றவெளியில் விளையாடப் போவதை போல பேச முடியாது. தமிழர்களின் அரசியலை அப்படி அடகு வைக்கும் அதிகாரத்தை- பொறுப்பை இந்த தரப்பினர் எவ்விதம் பெற்றனர்? தற்போதைய நிலையில் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியும், தமிழ் மக்கள் கூட்டணியும் மாத்திரமே பொதுவேட்பாளரை ஆதரித்துள்ளனர். மற்றையவர்கள் கூட்டத்துக்கு வந்தார்கள்- பொதுவேட்பாளர் கோட்பாடு நல்லது, ஆனால் அதற்கு ஏற்ற சூழல் இல்லை, சந்தேகங்கள் உள்ளதென குறிப்பிட்டு சென்று விட்டனர். பிரதான தமிழ் கட்சிகள் பொதுவேட்பாளர் விவகாரத்தில் உடன்பட எந்த வாய்ப்புமில்லை.

மக்கள் பிரதிநிதிகளான கட்சிகளின் சம்மதமின்றி- இப்போது ஆதரவளிக்கும் கட்சிகளின் துணையுடன் பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டு, அது தமிழ் மக்களால் ஆதரிக்கப்படாமல் விட்டால், இதற்கடுத்து எந்த விதமான போராட்டத்தை தலைமை தாங்கப்போகிறோம் அல்லது முன்னெடுக்கப் போகிறோம் என்பதை இந்த தரப்பினர் குறிப்பிட வேண்டும்.

பொதுவேட்பாளர் எந்த சுலோகத்தின் அடிப்படையில் முன்வைக்கப்பட போகிறார் என்பதே இன்னும் தீர்மானிக்கவில்லை. தனிநாடு கோரியா? சமஸ்டி கோரியா? சர்வசன வாக்கெடுப்பு கோரியா? அல்லது தமிழர்களின் திரட்சியை உருவாக்க அல்லது காண்பிக்கவா?

எந்த சுலோகத்தின் அடிப்படையில் பொதுவேட்பாளர் முன்னிறுத்தப்பட போகிறார் என்பதை தீர்மானிக்காமல், பொதுவேட்பாளரை தீர்மானிப்பது சந்தேகத்திற்கிடமானது. மக்களை ஏமாற்றும் நோக்கமுடையது. மணமகள் யாரென்பது தெரியாமல் மகனுக்கு திருமண திகதி குறித்து, மணமேடை அமைப்பதை போன்றது.

பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு தமிழ் அரசியல் கட்சிகள் இணங்கமாட்டார்கள் என்பது நிச்சயமானது. அவர்களின் அச்சம் நியாயமானது. நமது ஆய்வாளர்களை போல தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு ஓடவோ, தமிழ் மக்கள் பேரவை காலப்பகுதியை போல- அந்த காலப்பகுதியை மறந்து விட்டு, காலத்துக்கு காலம் புதிய சுலோகங்களை உருவாக்கவும், அதை வைத்து காசு பார்க்கவும் கட்சிகளாலும், மக்கள் பிரதிநிதிகளாலும் முடியாது. அவர்கள் மக்களிடம் மீளவும் செல்ல வேண்டும்.

பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதென்ற முடிவை எந்த அடிப்படையில் தீர்மானித்தோம் என்பதை இந்த தரப்பனர் வெளிப்படுத்த வேண்டும். பொதுவேட்பாளரை நிறுத்தி, மக்கள் ஆணையை பெற்றுக்காட்டுங்கள் என ஏதாவது சர்வதேச, பிராந்திய. தென்னிலங்கை தரப்பு தமிழர்களிடம் கோரியதா?. தமிழர்களின் ஆணை ஏற்கெனவே தெளிவாக சொல்லப்பட்டு விட்டது. அதற்கு மாற்றான ஆணையொன்று தேவையென்றாலே, அதை முன்னிறுத்தி பொதுவேட்பாளரை நிறுத்தலாம்.

தமிழ் மக்களை திரட்சியடைய செய்யப் போகிறோம் என கூறுவது- கற்பனை உலகத்திலிருந்து பேசுவது. மக்கள் தமிழ் தேசிய நிலைப்பாட்டிலேயே இருக்கிறார்கள். யார் தமிழ் தேசியவாதியென்பதை தெரியாமல், அங்கஜன் தரப்புக்கும் வாக்களிக்கிறார்கள் என்றால், தவறு யாரிடமுள்ளது?

நமது அரசியல் கட்சிகளிலல்லவா?

சிவில் சமூகம், அரசியல் கட்டுரைகள் எழுதுபவர்களிலல்லவா?

மக்கள் குழப்பமடைந்து, விரக்தியடைந்து தமிழ் தேசிய கட்கிகளுக்கு வாக்களிப்பு வீதம் குறைந்து செல்லும் நிலையில், இன்னொரு தேர்தலில் தமிழ் தேசிய தரப்பை நம்பி ஆதரிப்பார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? மக்கள் ஆதரவளிப்பார்கள் என எந்த கருதுகோளின் அடிப்படையில் முடிவெடுத்தார்கள்?

கடந்த பொதுத்தேர்தலுக்கு பின்னராக- தற்போது வரையான காலப்பகுதியில் மக்களின் மனநிலை மாற்றத்துக்கு- விரக்தியை போக்க- இந்த பொதுவேட்பாளர் ஆதரவாளர்கள் என்ன செய்தார்கள்?

எதுவுமே செய்யாமல், தூதரக பணத்தை பெற்றுவிட்டு, திடீரென சிவில் சமூகமென கூடாரத்தை அமைத்து, பொதுவேட்பாளர் என கூவுவது அரசியல் விபச்சாரமல்லவா?

தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவது, தமிழ் தரப்பில் திரட்சியை உருவாக்குமோ இல்லையோ, சிங்களத் தரப்பில் திரட்சியை உருவாக்க வாய்ப்புள்ளது. கோட்டாபயவை போல தனிச்சிங்கள ஜனாதிபதி உருவாகி, வடக்குப் பக்கமே தலைவைத்தும் பார்க்காமல் இருக்கிறார் என ஒரு பேச்சுக்கு வைக்கலாம். அரசியல் கைதிகள் விடுதலை, நில விடுவிப்பு, நினைவேந்தல் நாட்களில் கைதாகுபவர்கள் விவகாரம் உள்ளிட்ட சின்னச்சின்ன பிரச்சினைகளில் அரசை அணுகும் வாய்ப்பும் இல்லாமல் போகும். பொதுவேட்பாளர் ஜனநாயக வழியில் நமது உச்சபட்ட முயற்சியாக இருக்கும். பொதுவேட்பாளர் கோட்பாடு வெற்றியடைகிறதோ, தோற்கிறதோ என்பதை விடுவோம். அதன் பின் அடுத்தது என்ன?

ஒரு பொதுவேட்பாளரை நிறுத்தினோம். அவர் சிவாஜிலிங்கத்தை போல வாக்கெடுத்தார் அல்லது சற்று கூட எடுத்தார் என வைப்போம். அதன் பின்னர் அடுத்தது என்ன?

தமிழ் பொதுவேட்பாளர் விவகாரத்தில் பிராந்திய சக்தியொன்றின் சார்புடைய ஓரிரு அரசியல் கட்சிகள் தீவிரமாக இருந்தன. இதனால், அந்த பிராந்திய சக்தி, பொதுவேட்பாளர் விவகாரத்தில் ஆர்வமாக உள்ளதாக பலரும் நம்பி, பொதுவேட்பாளரின் பின்னால் இழுபட்டார்கள். பொதுவேட்பாளரின் பின்னால் பிராந்திய சக்தியில்லையென ஏற்கெனவே தமிழ் பக்கம் வெளிப்படுத்தியதை தொடர்ந்து, பொதுவேட்பாளரை  ஆதரித்த முக்கிய அரசியல் தலைவர் ஒருவர் கொழும்பிலுள்ள அந்த தரப்பின் தூதரகத்துடன் பேசியுள்ளார். அங்கு பேசி முடிந்ததும், கட்டுரையாளரை தொடர்பு கொண்டு பேசினார். குறிப்பிட்ட அதிகாரியொருவரை குறிப்பிட்டு, அவர் தன்னை கிட்டத்தட்ட தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் கேள்விகளை கேட்டதாக குறிப்பிட்டார். அவர் கேட்ட கேள்விகளில் ஒன்று- “யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடந்த தமன்னாவின் நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் மூன்றில் ஒரு பங்கு மக்களையாவது உங்களால் திரட்டி, பொதுவேட்பாளர் அறிமுகத்தை நடத்த முடியுமா?“ என. பொதுவேட்பாளர் என மாயமானின் பின்னால் ஓடி வழிதவறி விடாதீர்கள் என்பது அந்த பிராந்திய சக்தியின் அறிவுறுத்தல் என்றார்.

விரைவில் பொதுவேட்பாளர் விவகாரத்திலிருந்து சகல தமிழ் அரசியல் கட்சிகளும் விலகி விடும் என்பதே யதார்த்தம்.

எப்பொழுதும் மோதிக் கொண்டிருப்பதல்ல அரசியல். நமது பலவீனம் வெளிப்படும் சந்தர்ப்பங்களெனில், அமைதியாக இருப்பதும் புத்திசாலித்தனமே.

மக்களின் விரக்தியை போக்கி- நம்பிக்கையூட்டுவதெனில் அதற்கு செயற்பாட்டரசியல் தேவை. மாதமொரு கதவடைப்பு, கிழமைக்கொரு பத்திரிகை கட்டுரை, காலாண்டுக்கொரு ஆர்ப்பாட்டம் என இருந்து விட்டு, இப்பொழுது பொதுவேட்பாளர் மூலம் மக்களை திரட்ட போவதாக குறிப்பிடுவது நடைமுறை சாத்தியமா? அவர்கள் தம்மை தமன்னா என நினைத்துக் கொண்டிருக்கிறார்களா?

வடக்கு கிழக்கிலுள்ள அத்தனை தமிழர்களும் ஏகோபித்து தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களித்தாலும், அதை சர்வசன வாக்கெடுப்பாக பிரகடனப்படுத்தியிருந்தாலும்- அதனால் ஒரு துளி அரசியல் பலனும் கிடையாது என்ற கொடுமையான அரசியல் சூழல்தான் நிலவுகிறது. இந்த சூழலில் இருந்து மீண்டெழ பாராளுமன்ற, மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசிய பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கவே முயற்சிக்க வேண்டும். மக்களை ஒன்றுதிரட்டும் முயற்சிக்கு முன்னதாக கட்சிகள், மக்களின் நம்பிக்கையை நிரூபிக்க வேண்டும். இப்பொழுது முதலில் கட்சிகளிற்கான பரீட்சையே அவசியம். குடிமைச்சமூகமென மக்களுக்கு வகுப்பெடுக்க ஆரம்பித்துள்ள இந்த நபர்களின் வேலை என்ன?- தேர்தல் சீசன்களில் தோன்றி மக்களுக்கு வேட்பாளர்களை அறிமுகப்படுத்துவது மட்டுமா?. இதைத்தவிர வேறு என்ன செய்கிறார்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்கள், நில அபகரிப்பு, நினைவேந்தல் உரிமை உள்ளிட்ட ஏராளம் போராட்டங்கள் நடக்கின்றன. இதில் எதில் கலந்து கொண்டனர். அல்லது, இந்த போராட்டத்தில் என்ன அர்ப்பணிப்பை செய்தார்கள். போராட்டத்தின் பெயரால் சொகுசு வாழ்க்கை அனுபவிப்பதை தவிர வேறு எதைச் செய்தார்கள் என்பதை இவர்கள் வெளிப்படுத்த வேண்டும்.

சாதியாக… மதமாக… ஊராக… கோயிலாக பிரிந்துள்ள சமூகத்தின் உண்மையான ஒற்றுமைக்கு பொதுவேட்பாளர் வலி நிவாரணியாக மட்டுமே இருக்க முடியும். நோய்க்கு சிகிச்சையளிக்காமல்- மற்றவர்களை செயற்பட செய்யும் வலி நிவாரணி சிகிச்சை முறையையே இந்த வகையானவர்கள் காலத்துக்காலம் செய்து வருகிறார்கள். இதற்கு ஒரே தீர்வு உண்மையான சிகிச்சை. அது கட்சிகள், குடிமைச்சமூகம் செயற்பட்டு, தம்மை நிரூபிப்பதேயாகும்.

spot_imgspot_img

More like this
Related

விசாரணை நாட்களில் நீதிமன்றம் வந்து விட்டு, ஏனைய நாட்களில் ஊர் சுற்றலாம்: நாமலை கலாய்த்த அமைச்சர்!

எதிர்க்கட்சி அரசியல்வாதியான நாமல் ராஜபக்ச, திட்டமிடப்பட்ட திகதிகளில் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும்...

இலங்கையில் 25% தனியார் பேருந்துகள் மண்ணெண்ணெயிலேயே இயங்குகின்றன!

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெமுனு விஜேரத்ன, நாட்டின்...

அமெரிக்கா- ஈரான் ஒப்பந்தத்தின் 14 அம்ச உள்ளடக்கம் இதுதான்!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படும் 14 அம்ச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்