Pagetamil
முக்கியச் செய்திகள்

‘தமிழ் பொதுவேட்பாளர் கோட்பாடு தோல்வியடைந்தால் எமது தலையீட்டை தமிழர்கள் இழப்பார்கள்… இதன் பின்னணியில் நாங்கள் இல்லை’: பிரதான தமிழ் கட்சிகளிற்கு தெளிவுபடுத்திய வெளிநாட்டு தூதரங்கள்!

தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தில் பின்னடைவை ஏற்படுத்தும் அபாயமுள்ளதென எச்சரிக்கப்படும் தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தின் அபாயத்தை தமிழ் கட்சிகளின் தலைவர்களிடம், பல வெளிநாட்டு பிரதிநிதிகள் எச்சரித்துள்ளனர் என்பதை தமிழ்பக்கம் நன்கறிந்த ஆதாரங்கள் மூலம் தகவலறிந்தது.

தமிழ் பொதுவேட்பாளர் விவகாரம் பசுபிசுத்தால் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் தாம் தற்போது வரையறுக்கப்பட்டளவில் தலையிடும் நிலைமையும் கேள்விக்குள்ளாகும் அபாயமுள்ளதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.

தமிழ் தேசியப் பரப்பில் இயங்கும் 3 பிரதான கட்சிகளின் தலைவர்கள், 4 வரையான வெளிநாட்டு தூதர்கள், பிரதிநிதிகளால் எச்சரிக்கப்பட்டுள்ளனர். இதில், இலங்கை விவகாரத்தில் தீவரமாக தலையிடும் பிராந்திய சக்தியும் உள்ளடங்குகிறது என தமிழ்பக்கம் அறிந்தது.

யாழ்ப்பாணத்திலுள்ள வர்த்தகர், மற்றும் சிவில் சமூகம் என்ற பெயரில் ஆங்காங்கு உதிரிகளாக இருக்கும் சிலர் மற்றும் தேர்தல்களில் தோல்வியடைந்த ஓரிரு அரசியல்கட்சிகளின் தலைவர்கள் இணைந்து இந்த ஆபத்தான அரசியல் விளையாட்டை ஆரம்பித்துள்ளனர். மிகப்பெரும் பணச்செலவில் நட்சத்திர ஹொட்டல்களில் சந்திப்புக்கள், மது விருந்துகள் நடத்தப்பட்டு, பெரும் பணப்பரிமாற்றம் நடத்தப்பட்டு பொதுவேட்பாளர் பிரச்சாரம் நடத்தப்படுகிறது.

தமிழ் மக்களின் வாக்குகள் சஜித், அநுர தரப்பிற்கு செல்லாமல் தடுக்கும் மற்றொரு சிங்கள தரப்பின் பின்னணியில் இந்த நாடகம் அரங்கேற்றப்படுவதாக பரவலாக சந்தேகம் எழுப்பப்பட்டு வருகிறது. ஏனெனில், ராஜபக்சக்களுக்காக செயற்பட்ட ஒருவரே தற்போது பணத்தை தண்ணீராக இறைத்து தமிழ் பொதுவேட்பாளர் என கூச்சலிடுபவர்களிற்கு மதுபான விருந்து உள்ளிட்ட காரியங்கள் மூலம் உற்சாகமூட்டி வருகிறார்.

தமிழ் பொதுவேட்பாளர் விவகாரத்தில் வெளிநாட்டு தலையீடுகள் ஏதும் இருக்கிறதா என்ற சந்தேகம் ஏனைய தமிழ்கட்சிகளிடம் இருந்து வந்துள்ளது. குறிப்பாக ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பு  தமிழ் பொதுவேட்பாளர் கோசத்தை ஆரம்பித்திருந்தது. அந்த அமைப்பு இந்தியாவுடன் நெருக்கமான தொடர்பை பேணி வருகிறது. இதனால் இந்திய பின்னணி குறித்தும் தமிழ் கட்சிகளிடம் சந்தேகம் இருந்தது.

இந்த பின்னணியில், 3 பிரதான தமிழ் கட்சிகளின் தலைவர்கள், பொதுவேட்பாளர் பற்றிய இறுதி முடிவு எடுப்பதற்கு முன்னதாக பல்வேறு வெளிநாட்டு தூதரங்களுடன் உரையாடியதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது. இதில், பொதுவேட்பாளருடன் தொடர்புபடுத்தி சந்தேகிக்கப்பட்ட எந்த வெளிநாடும் சம்பந்தப்படவில்லையென்பது உறுதியாகியுள்ளது.

பிரதான தமிழ் தேசிய கட்சியின் தலைவர் இது தொடர்பில் தமிழ்பக்கத்துடன் பேசுகையில்- “பொதுவேட்பாளரின் பின்னணி பற்றிய சந்தேகம் எங்களுக்கு இருந்து கொண்டிருந்தது. தீவிர கொள்கையுடைய ஒரு பகுதியினரும் இதை ஆதரிக்கிறார்கள். அதனை பயன்படுத்தி வேறொரு தரப்பு இதனை முன்னெடுக்கிறதா என்பதுதான் எமது ஐயம். எமது கட்சியின் சிலரும் இதை ஆதரிக்கிறார்கள்தான். அதனால்தான் விரைவில் கட்சி கூட்டத்தை கூட்டி, முடிவை அறிவிப்பதாக சொல்லியிருக்கிறோம். இலங்கை விவகாரத்தில் அக்கறையுள்ள வெளிநாட்டு சக்திகளையும் நாம் ஆலோசிக்க வேண்டுமென்பதால், பல வெளிநாடுகளின் பிரதிநிதிகளை, தூதர்களை அண்மையில் தொடர்பு கொண்டு பேசினோம். அவர்கள் யாரும் பொதுவேட்பாளரின் பின்னணியில் தாங்கள் இல்லையென்றார்கள்.

இன்னும் ஒரு படி மேலே போய், அவர்கள் ஒரு எச்சரிக்கைதான் விடுத்தார்கள். இந்த விவகாரத்தை கேள்விப்பட்டதும், தாம் ஆச்சரியமடைந்ததாகவும், ஏன் இப்படியொரு விசப்பரீட்சையில் இறங்குகிறீர்கள் என கருதியதாகவும் குறிப்பிட்டனர்.

“இது உங்கள் சொந்த மக்கள்- கட்சிகள்- அரசியல் பற்றிய விவகாரம்தான். எமக்கு நீங்கள் எப்படி செயற்படுகிறீர்கள் என்பதில் எந்த பிரச்சினையுமில்லை. இதனால் எமக்கு எந்த இலாபமோ நட்டமோ ஏற்படாது. மறுவளமாக உங்களுக்குத்தான் பிரச்சினைகள் ஏற்படலாம். அண்மைக்கால தேர்தல் முடிவுகளை அவதானிக்கும் போது, இந்த பொதுவேட்பாளர் முடிவு புத்திசாலித்தனமாக தென்படவில்லை. ஒருவேளை, உங்கள் பொதுவேட்பாளர் கோட்பாடு தோல்வியடைந்தால், நாங்கள் (வெளிநாடுகள்) தமிழர் விவகாரத்தில் தலையிடும் வரையறுக்கப்பட்ட அளவிலும் பிரச்சினைகள் வரும். இப்பொழுதே நமக்கு நிறைய வரையறைகள் உள்ளன. இந்த சூழலில் நீங்கள் நிறுத்தும் பொதுவேட்பாளரும் கோட்பாட்டு ரீதியாக தோல்வியடைந்தால், நாம் இலங்கை விவகாரத்தில் தலையிடுவதற்கான தார்மீக பொறுப்பை இழந்து விடுவோம். எமக்கு இலங்கை விவகாரம் நீடிக்க வேண்டும், நாம் அரசுக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டுமென்ற எந்த விருப்பமோ கிடையாது அல்லவா. இலங்கையில் இனப்பிரச்சினை நிலவுவதால்தான் நாம் தலையிடுகிறோம். அந்த நிலைமையை நீடிப்பதும், இல்லாமல் செய்வதும் உங்கள் கைகளில்தான் உள்ளது.

குறிப்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மிகுந்த நெருக்கடியின் மத்தியிலேயே இலங்கை விவகாரத்தை கையிலெடுக்கிறோம். உங்கள் மக்களின் வாக்கு எதிர்மறையாக அமையுமானால், அடுத்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலும் இது எதிரொலிக்கும். இலங்கைக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள காலஅவகாசத்தில் எதுவும் செய்யவில்லையென்றாலும், இறுக்கமான புதிய தீர்மானங்களை கொண்டு வர முடியாது“ என தெரிவித்தார்.

இதே சாரப்படவே ஏனைய நாட்டு தூதரகங்கள் தரப்பிலிலும் விளக்கம் தரப்பட்டதாக குறிப்பிட்டார்.

இதுதவிர, தமிழ் தேசிய பரப்பிலுள்ள ஏனைய பிரதான 2 கட்சிகளிற்கும் இதேவிதமான செய்தி வழங்கப்பட்டதை தமிழ்பக்கம் அறிந்தது.

இதுதவிர, தமிழ் பொதுவேட்பாளர் விவகாரத்தில் தீவிரம் காட்டும் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பிற்கு, பொதுவேட்பாளரின் அபாயம் குறித்து சில பிராந்திய சக்திகள் எச்சரிக்கை ஆலோசனை வழங்கியதையும் தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது. எனினும், அந்த எச்சரிக்கைகளையும் மீறி ஈ.பி.ஆர்.எல்.எவ் செயற்படுவது அந்த சக்திகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, தமிழ் பொதுவேட்பாளர் விவகாரத்தில் தீவிரம் காட்டும் சிவில் சமூக பிரதிநிதியென குறிப்பிடும் தனிமனதரொருவருடன் அண்மையில் உரையாடிய போது, “தமிழ் பொதுவேட்பாளர் கோட்பாட்டளவில் தோல்வியடைந்தால் என்ன, நாங்கள்  அடிக்கடி இப்படி அரசியல் விளையாட்டுக்கள் காட்டிக் கொண்டிருந்தால்தான் கட்சிகள் திருந்துவார்கள்“ என பொறுப்பற்ற விதமாக பதிலளித்ததாகவும் வெளிநாட்டு தூதரகமொன்றின் அரசியல் விவகார பிரிவு பொறுப்பதிகாரியும் வெளிப்படுத்தியுள்ளார்.

சர்வதேசத்துக்கு செய்தி சொல்ல தமிழ் பொதுவேட்பாளரை நியமிக்கிறோம் என, தமிழ் பொதுவேட்பாளருக்காக செயற்பட்டவர்கள் கதை விட்ட போதும், அது அபாயமான விளைவைத்தரும் அரசியல் விளையாட்டு என பல தரப்பினரும் எச்சரித்திருந்தனர். சர்வதேசத்துக்கு புதிதாக எந்த செய்தியும் சொல்ல வேண்டிய அவசியமில்லையென்றும் குறிப்பிட்டு, அதற்கான களச்சூழலை கட்சிகள், சிவில் அமைப்புக்கள் எனப்படுபவர்கள் உருவாக்காமல், திடீரென பொதுவேட்பாளரென களமிறங்குவது அரச பின்னணியென்ற சந்தேகம் வலுத்திருந்தது. அது மேலும் வலுப்படும் விதமாக, இந்த விவகாரத்தின் அபாயத்தை கட்சிகளின் தலைவர்களிடம் வெளிநாட்டு பிரதிநிதிகளும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதையும் படியுங்கள்

கொழும்பு மாநகரசபை, பல யாழ் உள்ளூராட்சிசபைகளுக்கான தேர்தலுக்கு இடைக்கால தடை!

Pagetamil

முன்னர் ஒன்றாக வந்தீர்கள்… இப்போது மூன்றாக வந்துள்ளீர்கள்; தமிழர்களுக்கிடையிலானதே மீனவர் பிரச்சினை: மோடி- தமிழ் கட்சிகள் சந்திப்பில் பேசப்பட்டவை!

Pagetamil

இலங்கை- இந்தியாவுக்கிடையில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

Pagetamil

நரேந்திர மோடிக்கு பெரும் வரவேற்பு!

Pagetamil

‘என் மனைவியை தொட்டால்…’: ஜனாதிபதி அனுரவை எச்சரித்த மஹிந்தவின் சகா!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!