தனக்குத் தானே பிரசவம் பார்த்துக் கொண்ட செவிலியர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர், குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வினிஷா ( 24 ). செவிலியர் படிப்பை முடித்த பின்னர் சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த ஓராண்டாக செவிலியராக பணியாற்றி வந்தார். மேலும், அந்த மருத்துவமனை செவிலியர்கள் தங்கி உள்ள தி.நகர் தெற்கு போக் சாலையில் உள்ள மருத்துவமனை ஊழியர் குடியிருப்பில் தங்கி இருந்தார். இந்நிலையில், அவருக்கும் சென்னையில் ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணி செய்யும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். கணவன் மனைவி உறவில் இருந்துள்ளனர். இந்நிலையில், வினிஷா கர்ப்பமானார். கடந்த 30-ம் தேதி அதிகாலை 5.20 மணியளவில் அவருக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டது. பிரசவ வலி என்பதை உணர்ந்த அவர், குடியிருப்பில் தங்கி இருந்து தோழிகள் உட்பட யாரிடமும் தெரிவிக்காமல், குடியிருப்பு குளியலறைக்கு சென்று வலியால் துடித்துள்ளார். வயிற்றில் இருக்கும் குழந்தை வெளியே வர தாமதமாகி உள்ளது.
மேலும், கடும் வயிற்று வலியும் ஏற்பட்டுள்ளது. இதனால், செய்வது அறியாது தவித்த அவர்,குழந்தையின் கழுத்தை பிடித்து வெளியே இழுத்துள்ளார். சிறிது நேரத்தில் குழந்தை இறந்துள்ளது. வினிஷாவும் அங்கேயே மயங்கி உள்ளார். நீண்ட நேரமாகியும் அறையை விட்டு வெளியே வராததைக் கண்டு அவரது தோழிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பிரேத பரிசோதனை: குளியலறை சென்று பார்த்தபோது, மயங்கிய நிலையில் வினிஷா கிடந்ததும், பிறந்த குழந்தை இறந்து கிடந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் வினிஷாவை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த குழந்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில், குழந்தை கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, கொலை வழக்கில் வினிஷாவை மாம்பலம் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: திருமணத்துக்கு முன்னர் கர்ப்பமானதால் வினிஷா அவரது கர்ப்பத்தை குடும்பத்தினர், தோழிகள், சக பணியாளர்களிடமிருந்து மறைத்துள்ளார். இந்நிலையில்தான் அவருக்கு கடந்த 30ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. குழந்தை பிறக்கப்போவதை உணர்ந்த அவர், வெளியே தெரியாமல் பிரசவம் பார்க்க முடிவு செய்தார். செவிலியர் என்பதால் அவரே பிரசவம் பார்க்கவும் முடிவு செய்துள்ளார்.
எளிதில் குழந்தை பிறந்து விடும் என எண்ணியுள்ளார். ஆனால், குழந்தை வெளியில் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குழந்தை வெளியே தெரிந்த நிலையில், உடல் பாகங்களை பிடித்து இழுத்துகுழந்தையை வெளியே கொண்டு வந்துள்ளார். மேலும், குழந்தை உயிரோடு இருந்தால் எதிர்காலத்தில் சிக்கல் ஏற்படும் என்பதற்காக குழந்தையின் கால்களை வெட்டி எறிந்துள்ளார். மேலும், குழந்தையின் கழுத்தை நெரித்துகொலை செய்துள்ளார். இதையடுத்து கொலை வழக்கில் அவரைகைது செய்துள்ளோம் என போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.