2024 மக்களவைத் தேர்தலில் உ.பி.யின் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதாக காங்கிரஸ் தலைமை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் “மத்திய தேர்தல் குழு கூட்டத்தில், 2024 மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி, உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதி வேட்பாளராகவும், அமேதி தொகுதிக்கு கிஷோரி லால் சர்மா வேட்பாளராகவும் அறிவிக்கப்படுகின்றனர்” என்று கூறப்பட்டுள்ளது.
உ.பி.யில் அமேதி, ரேபரேலி தொகுதிகள் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய தொகுதிகளாக உள்ளன. இங்கு நேரு-காந்தி குடும்பத்தினர் தொடர்ந்து போட்டியிட்டு வருகின்றனர்.
அமேதியில் இருந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2004 முதல் 3 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019-ல் அவர் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்தார். எனினும் அவர் 2-வது தொகுதியாக போட்டியிட்ட, கேரளாவின் வயநாட்டில் வெற்றி பெற்றார். இப்போதைய தேர்தலில் இங்கு ராகுல் மீண்டும் போட்டியிடுகிறார்.
இதுபோல் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு முன்னாள் தலைவரும் ராகுலின் தாயாருமான சோனியா காந்தி, உ.பி.யின் ரேபரேலியில் கடந்த 2004 முதல் தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்றுள்ளார். இம்முறை அவர் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஏற்கெனவே அமேதி தொகுதியில் ராகுல் காந்தியும், ரேபரேலியில் பிரியங்கா காந்தியும் களமிறங்குவார்கள் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது ரேபரேலி தொகுதி வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்பட்டுள்ளார். அமேதி, ரேபரேலி இரண்டு தொகுதிகளுக்கும் ஐந்தாவது கட்டமாக மே 20-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி இன்றே வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்.