கொள்ளுப்பிட்டி பகுதியில் ஒரு கோடி இலஞ்சம் பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட மோசடிப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் சார்ஜனை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் கோசல சேனாதீர நேற்று (02) உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படும் 16 இலட்சம் ரூபா பணம் பொலிஸ் சார்ஜனின் வீட்டின் கழிவறை குழியில் புதைத்து வைக்கப்பட்டிருந்ததாக, சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி அவர் உள்ளிட்ட குழுவினர் முறைப்பாட்டாளரின் வீட்டிற்குள் நுழைந்து குற்றப் புலனாய்வு அதிகாரிகள் என கூறிக்கொண்டு பெட்டகத்திலிருந்த பணத்தை திருடிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
முறைப்பாட்டாளரின் வீட்டிற்குள் நுழைந்து கொலைமிரட்டல் விடுத்து 3500 அமெரிக்க டொலர்கள் மற்றும் 120 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாக கைது செய்யப்பட்ட மோசடி விசாரணை சார்ஜன்ட் தெரிவித்துள்ளார்.
சார்ஜன்ட் சார்பில் சட்டத்தரணி தர்மசிறி கமகே உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாம் முன்வைத்த பிணை கோரிக்கையை நிராகரித்த நீதவான், சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
கொள்ளுப்பிட்டி பகுதியில் ஒரு கோடி இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணைகளின் பின்னர் மேலும் நால்வர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபரான சார்ஜன்ட் குருநாகல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.