தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மா.க.ஈழவேந்தன் நேற்று (28) கனடாவில் காலமானார்.
அவருக்கு வயது 92.
கனகேந்திரன் என்ற இயற்பெயரை கொண்ட அவர், தமிழீழ கொள்கையில் கொண்ட ஈர்ப்பு காரணமாக, ஈழவேந்தன் என பெயர் மாற்றம் செய்து கொண்டார்.
தமிழ் அரசு கட்சியின் நீண்டகால செயற்பாட்டாளராக இருந்த அவர், 1970களில் வி.நவரத்தினம் தமிழர் சுயாட்சிக்கழகத்தை ஆரம்பித்த போது, அதில் இணைந்து செயற்பட்டார். பின்னர், மீளவும் தமிழ் அரசு கட்சியில் இணைந்து செயற்பட்டார்.
1980 ஆம் ஆண்டில் வேறு சிலருடன் இணைந்து தமிழரசுக் கட்சியில் இருந்து விலகி, தமிழீழ விடுதலை முன்னணி என்ற கட்சியை ஆரம்பித்து, அக்கட்சியின் செயலாளராக பணியாற்றினார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அபிமானியாக இருந்தார்.
விடுதலைப் புலிகளுக்கு மருந்துகள் கொள்வனவு செய்தனர் என்ற குற்றச்சாட்டில் இவரும் வேறும் நால்வரும் 1997 பெப்ரவரியில் சென்னையில் கைது செய்யப்பட்டனர். 1999 ஆம் ஆண்டில் இவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.உஈழவேந்தன் 2000 டிசம்பர் 4 இல் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.
2004 நாடாளுமன்றத் தேர்தலில் ஈழவேந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டு நாடாளுமன்றம் சென்றார். மூன்று மாத விடுமுறை பெற்று கனடா சென்றார். அவரது விடுமுறையை நீடிக்க கோரிக்கை சமர்ப்பிக்க மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரிடம் கேட்டிருந்தார். எனினும், அவர் அதை மறந்து விட்டார். ஈழவேந்தன் நாடு திரும்ப ஒரு வாரம் தாமதமானதால் இவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி 2007 நவம்பரில் பறி போனது.
ஈழவேந்தன் இலங்கையில் இருந்து இடம் பெயர்ந்து கனடாவுக்குப் புலம் பெயர்ந்தார். 2010 மே மாதத்தில் நாடு கடந்த தமிழீழ அரசின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.




