இந்த ஐபிஎல் சீசனில் அதிக தோல்வியடைந்த அணியான பெங்களூர், இன்று அசம்பாவிதம் செய்து, குஜராத் அணியை சின்னாபின்னமாக்கியது.
இன்று அகமதாபாத்தில் நடைபெற்ற 45வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற பெங்களூரு அணியின் கப்டன் டு பிளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
குஜராத் அணி தொடக்க வீரர்களாக சுப்மன் கில் , சஹா ஆகியோர் களமிறங்கினர். சஹா 5 ரன்களிலும் , கில் 16 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் சாய் சுதர்சன் , ஷாருக்கான் இருவரும் இனணந்து சிறப்பாக ஆடி ரன்கள் குவித்தனர்.cபெங்களூர் அணியின் பந்துவீச்சை இருவரும் பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டனர். தொடர்ந்து அதிரடி காட்டிய சாய் சுதர்சன் , ஷாருக்கான் இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.
ஷாருக்கான் 30 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அரைசதம் கடந்த பிறகும் சாய் சுதர்சன் தொடர்ந்து அதிரடியாக விளையாடினார். இறுதியில் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்தது. சாய் சுதர்சன் 49 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து 201 ரன்கள் இலக்குடன் பெங்களூரு அணி விளையாடியது.
தொடக்க வீரர்களாக டு பிளசிஸ், விராட் கோலி ஆகியோர் களமிறங்கினர். அதிரடியாக தொடங்கிய டு பிளசிஸ் 24 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து வில் ஜக்ஸ் களமிறங்கினார்.
விராட் கோலி சுமாரான அதிரடியில் ஆடிக்கொண்டிருக்க, புதிதாக களமிறங்கிய வில் ஜக்ஸ் நிதானமாக தொடங்கி பின்னர் அதிரடி காட்டினார். அது எப்படியான அதிரடியென்றால், ஜக்ஸ் தான் சந்தித்த முதல் 17 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார். அடுத்த 24 பந்துகளில் 83 ரன்கள் எடுத்தார்.
ருத்ரதாண்டவம் ஆடிய வில் ஜக்ஸ் தொடர்ந்து சிக்சர்களை பறக்க விட்டார். அவர் 41 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். ரசீத் கான் வீசிய 16வது ஓவரில் 29 ரன்கள் விளாசப்பட்டன. இதில் ஜக்ஸ் கணக்கில் 28 ரன்கள்.
இறுதியில் 16 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அபாரவெற்றி பெற்றது. ஜக்ஸ் ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களுடனும், கோலி ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்களுடனும் களத்திலிருந்தனர்.




