24.9 C
Jaffna
January 25, 2025
Pagetamil
இலங்கை

வலம்புரி பத்திரிகை ஆசிரியர் பரீட்சையில் சித்தியடையவில்லை: ஆளுனர் செயலகம் வில்லங்க விளக்கம்!

யாழ்ப்பாணத்தில் வெளிவரும் வலம்புரி பத்திரிகையில் கடந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதி பிரசுரமாகிய ஆசிரியர் தலையங்கம் தொடர்பில், ஆளுநர் செயலகத்தால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு குறித்து பல்வேறு தரப்பும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நேற்று ஆளுனர் செயலகம் ஒரு சளாப்பல் விளக்கம் வெளியிட்டுள்ளது.

ஆளுனரின் நடவடிக்கைகளை விமர்சித்ததால், வலம்புரி பத்திரிகை ஆசிரியரின் அரச உத்தியோக ரீதியில் நெருக்கடி கொடுக்கும் மிரட்டல் தொனிக்கும் விதமாக அந்த விளக்கம் அமைந்துள்ளது.

அதன் விபரம் வருமாறு-

விமர்சனங்கள் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது. இந்நிலையில் இன்றைய தினம் (23/04/2024) பிரசுரமாகிய வலம்புரி பத்திரிகையின் முதற்பக்கத்திலும், ஊடகங்களின் சுதந்திரத்தை ஆளுநர் கேள்விக்குள்ளாக்குவதை போன்று தலைப்பிடப்பட்டு செய்தி பிரசுரமாகியுள்ளது.

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படும் ஊடகங்கள் அதன் தாற்பரியம் அறிந்து செயற்பட வேண்டும் என்பதே எமது கருத்தாகும். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கணக்காளரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, வலம்புரி பத்திரிகையின் பிரதம ஆசிரியருக்கு தனது நியாயப்பாடுகளை சமர்பிக்க பொலிஸாரால் விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அமைய, கடந்த 22 ஆம் திகதி வாக்குமூலம் வழங்க அவர் சென்றிருந்தார். விடயம் தொடர்பான முறைப்பாடு ஆளுநர் செயலகத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு, பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். இதில் கௌரவ ஆளுநரின் எவ்வித தலையீடுகளும் இல்லை என்பதை இந்த ஊடக அறிக்கையினூடாக கூறிக்கொள்கின்றோம்.

வலம்புரி பத்திரிகையின் பிரதம ஆசிரியராக செயற்படும் நல்லையா விஜயசுந்தரம் என்பவர் ஓர் அரச உத்தியோகஸ்தர். ஆசிரியர் நியமனம் பெற்றுள்ள இவர், சுமார் 15 வருடங்கள் கடமை நிறைவேற்று அதிபராக செயற்பட்டு வந்துள்ளார். இந்த காலப்பகுதியில் பல தடவைகள் அதிபர் தரத்திற்கான போட்டி பரீட்சைகள் நடத்தப்பட்ட போதிலும், இவர் உள்ளிட்ட சில கடமை நிறைவேற்று அதிபர்கள் பரீட்சையில் சித்தியடைய தவறியுள்ளனர். இந்நிலையில், அண்மையில் அதிபர் சேவைக்கான போட்டி பரீட்சை நடத்தப்பட்டு வழங்கப்பட்ட அதிபர் நியமனத்தின் போதும், சில கடமை நிறைவேற்று அதிபர்கள் உள்வாங்கப்படவில்லை. இந்த விடயம் தொடர்பில் கடமை நிறைவேற்று அதிபர் சங்கத்தால் சுமார் நான்கு மாதங்களுக்கு முன்னர் கௌரவ ஆளுநரிடம் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டது. மத்திய கல்வி அமைச்சிடமும் தமது கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதால், அவர்களின் தீர்மானம் கிடைக்கும் வரை, கடமை நிறைவேற்று அதிபர்களாக செயற்பட அனுமதிக்குமாறு கௌரவ ஆளுநரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டதற்கு அமைய, மத்திய அமைச்சின் தீர்மானம் வரும் வரை அவர்கள் கடமை நிறைவேற்று அதிபர்களாக செயற்பட கௌரவ ஆளுநர் அவர்களினால் அனுமதி வழங்கப்பட்டது. எனினும், இவர்களின் கோரிக்கையை அமைச்சரவை ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த விடயங்கள் கௌரவ ஆளுநரின் அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டது என்பது தொடர்பில் கடமை நிறைவேற்று அதிபர் சங்கத்திற்கு தெளிவுப்படுத்தப்பட்ட பின்புலத்தில், வடக்கு மாகாணத்தின் அமைச்சுக்களின் செயலாளர்களின் செயற்பாடுகள் தொடர்பிலும், கௌரவ ஆளுநர் அவர்களின் நடவடிக்கை தொடர்பிலும், கடந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதி வலம்புரி பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் “ஆளுநருக்கான அவசர மடல்” என்ற தலைப்பின் கீழ் விமர்சிக்கப்பட்டிருந்தது. அமைச்சின் செயலாளர்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாக கூறியுள்ள போதிலும், அதன் உண்மைத்தன்மையை அவர் வெளிப்படுத்தியிருக்கவில்லை. ஆதாரங்களுடன் எமக்கு அறிவித்திருந்தால் அது தொடர்பில் நடவடிக்கை எடுத்திருக்க முடியும். அதனை விடுத்து மக்களை குழப்பும் வகையில் செய்திகளை பிரசுரிப்பது எந்த வகையில் ஊடக தர்மத்திற்கு பொருத்தமானது?

இதேவேளை “சிங்களவர் ஒருவர் வடக்கின் ஆளுநராக இருந்தால்”… என்றும் அவர் தனது ஆசிரியர் தலைப்பில் எழுதியிருந்தார். இதனூடாக இன நல்லிணக்கத்திற்கு பாதகம் ஏற்படும் வகையில் அவர் எழுதுகிறாரோ என்ற கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டி உள்ளது. மேலும் அதிமேதகு ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதியாக நியமிக்கப்படும் ஆளுநர்கள் தொடர்பிலும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. வடக்கு மாகாணத்தில் ஏற்கனவே பணியாற்றிய ஆளுநர்களின் செயற்பாடுகளை உதாரணம் காட்டி அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கௌரவ ஆளுநர் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகார எல்லைக்கு உட்பட்டு அவர் தனது பணியை சிறப்புற முன்னெடுத்துவரும் நிலையில், இவ்வாறான அவதூறான செய்திகளை பிரசுரிப்பது பொருத்தமற்ற செயல் என நாம் கருதுகின்றோம். வலம்புரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர், அரச நியமனம் பெற்ற ஆசிரியராக பணியாற்றிக்கொண்டு இவ்வாறு தனது தனிப்பட்ட விடயங்களுக்காக, ஊடகத்தை பயன்படுத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது. இந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு, நாட்டில் தற்போது காணப்படும் சட்டங்களுக்கு அமைய, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

வலம்புரி பத்திரிகையின் பிரதம ஆசிரியரான நல்லையா விஜயசுந்தரம் என்பவர் அரச உத்தியோகஸ்தர் என்ற அடிப்படையில், அவர் தொடர்பான திணைக்களமட்ட ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்வதற்கான முன்னோடியாகவே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதனை தவிர ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. நிர்வாக சமநிலையை சீர்குலைக்கும் வகையிலும், இன, மதங்களுக்கு இடையில் பங்கம் ஏற்படும் வகையில் அவர் செயற்பட்டுள்ளதாக நாம் கருதுகிறோம்.

பொதுமக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஊடகங்கள் எம்மோடு இணைந்து செயற்பட வேண்டும். அரச சேவையை பெற்றுக்கொள்ள பொதுமக்கள் சிக்கலை எதிர்நோக்கும் பட்சத்தில் ஊடகங்கள் அவற்றை எமக்கு அறிவிக்க முடியும். அதைவிடுத்து விமர்சனம் என்ற போர்வையில் ஊடக தர்மத்திற்கு எதிராக ஊடகங்கள் செயற்படக்கூடாது என்பதே எமது அவா.

ஊடக சுதந்திரத்தில் ஒருபோதும் நாம் தலையிடுவதில்லை என்பதுடன் ஊடகங்களுடன் இணைந்து மக்கள் பணியாற்ற நாம் கடமைப்பட்டுள்ளோம் என்பதையும் கூறிக்கொள்கிறோம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சாரதிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல்

east tamil

இந்திய மீனவர் அத்துமீறல்: எதிர்க்கட்சி தமிழ், முஸ்லிம் எம்.பிகளை சந்தித்த மீனவர் பிரதிநிதிகள்!

Pagetamil

பாராளுமன்றத்தில் முதன்முறையாக கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் விழா

east tamil

கைதிகள் நலனுக்காக யாழ். சிறையில் கணினி மையம்

east tamil

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராக அரவிந்த செனரத் நியமனம்

east tamil

Leave a Comment