Pagetamil
முக்கியச் செய்திகள்

தமிழ் அரசு கட்சி வழக்கு மே 31 வரை ஒத்திவைப்பு: நீதிமன்றத்துக்குள் பல்டியடித்த சுமந்திரன் அணியினர்; மற்றொருவருக்கு பிடியாணை!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் உட்கட்சி மோதல் வழக்கு இன்று (24) திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, மனுதாரர் தரப்பினர் இந்த வழக்கின் எதிர்காலம் குறித்து முடிவு செய்வதற்காக மே 31ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டு, வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

எம்.ஏ.சுமந்திரன் அணியை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்படும் குலநாயகம், பா.சத்தியலிங்கம் இருவரும், இந்த வழக்கில் முன்னர் எடுத்த நிலைப்பாட்டை மாற்றி, எம்.ஏ.முந்திரனை போலவே ஆட்சேபணை தாக்கல் செய்துள்ளனர்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் உள்ளிட்ட நிர்வாக தெரிவுகளுக்கு எதிராக திருகோணமலையை சேர்ந்த கட்சியின் கீழ் நிலை உறுப்பினர் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இரா.சாணக்கியன் சுதந்திரகட்சியில் செயற்பட்ட காலத்திலிருந்தே அவருடன் நெருக்கமாக செயற்பட்ட அந்த நபர் வழக்கு தொடர்ந்ததன் பின்னணி குறித்து கட்சியின் பிரமுகர்களே பல தகவல்களை வெளியிட்டிருந்தனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, ஜனாதிபதி சட்டத்தரணிகள் கே.வி.தவராசா, எம்.ஏ.சுமந்திரனுக்கு இடையில் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் நடந்தன.

இந்த வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பிடுமாறு 6ஆம் பிரதிவாதியான எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக்கொண்டார்.

எனினும், ஏனைய சில பிரதிவாதிகளை பிரதிநிதித்துவப்படுத்திய சட்டத்தரணி கே.வி.தவராசா கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினார். யாப்பு விதிமுறைகளுக்கு புறம்பாக 20 பேரை வாக்களிக்க அனுமதித்ததாக சுமந்திரன் குறிப்பிட்டது தவறு. 14 பேர் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனை கருத்தில் கொண்டு, மனுதாரர் கோரும் நிவாரணங்களை வழங்க தயாராக இருப்பதாக வழக்கின் ஒரு பிரதிவாதி (சுமந்திரன்) தவிர்ந்த ஏனையவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கை தொடர விரும்பவில்லை. வழக்காளி கோரும் நிவாரணங்களை வழங்கி, வழக்கை முடித்து வைக்க விரும்புகிறோம் என்றார்.

இதன்போது, வழக்காளி தரப்பு சட்டத்தரணி- கடந்த தவணைகளில் இருந்த நிலைமை இப்பொழுது இல்லை. 6வது பிரதிவாதி (சுமந்திரன்)எடுத்த நிலைப்பாட்டை போல, 3 (குலநாயகம்), 5 (ப.சத்தியலிங்கம்) ஆம் பிரதிவாதிகளும் நிலைப்பாடு எடுத்து ஆட்சேபணை தாக்கல் செய்துள்ளனர் என்றார்.

குலநாயகத்தின் மகளான சட்டத்தரணி சமங்களா, இருவர் சார்பிலும் ஆட்சேபணை தாக்கல் செய்தார். இதை கட்சியின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் அறிந்திருக்கவில்லை.

இதற்கு கே.வி.தவராசா கடுமையான ஆட்சேபணை தெரிவித்தார். வழக்கின் ஆரம்பத்தில் தமக்கு ஆட்சேபணை இல்லையென நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு விட்டு, இப்பொழுது நிலைப்பாட்டை மாற்ற முடியாதென சுட்டிக்காட்டினார். அதாவது நீதிமன்றத்தில் ஒருவர் குற்றவாளியென ஏற்றுக்கொண்டு விட்டு, அடுத்த தவணையில் வந்து நிரபராதியென கூற முடியுமா என கேள்வியெழுப்பினார்.

வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பதை எதிர்த்த சட்டத்தரணி கே.வி.தவராசா, வழக்காளி என்ன எதிர்பார்க்கிறார், வழக்கை முடிவுக்கு கொண்டு வரவும், வழக்கை வாபஸ் பெறவும் அவரது நிலைப்பாடு என்ன என அறிய திகதி நிர்ணயிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை மே 31ஆம் திகதிக்கு ஒத்திவைத்து, அன்றைய தினம் வழக்காளி தனது நிலைப்பாட்டை அறிவிக்க உத்தரவிட்டார்.

இதேவேளை, இந்த வழக்கில் தமிழ் அரசு கட்சியின் கனடா கிளை உறுப்பினரான மு.அகிலன் மீது கடந்த வழக்கு விசாரணையில், எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு சுமத்தியிருந்தார். அவரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

எனினும், இன்று மு.அகிலன் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. அவர் சார்பில் சட்டத்தரணிகள் கனகசபை ரவீரந்திரன், துசித் ஜோன்தாசன் ஆகியோரால் இடைபுகு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எம்.ஏ.சுமந்திரன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் முன்னிலையாகாத அகிலனுக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.

இந்த வழக்கில் 2,4ஆம் எதிராளிகள் சார்பில் சட்டத்தரணிகள் பிருந்தா சந்திரகேஸ், சிவானந்தராஜா, ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா ஆகியோரும், 1,7ஆம் எதிராளிகள் சார்பில் சட்டத்தரணிம.யூட் டினேஸ், ஜனாதிபதி சட்டத்தரணி வி.புவிதரன் ஆகியோரும், 3,5ஆம் எதிராளிகள் சார்பில் சட்டத்தரணி குலநாயகம் சுமங்களா, 6ஆம் எதிராளி எம்.ஏ.சுமந்திரன் சார்பில் அவரே முன்னிலையாகினர்.

வழக்காளி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஜிப்ரி அழகரட்ணம் முன்னிலையானார். அவர் இன்று 6ஆம் பிரதிவாதியான எம்.ஏ.சுமந்திரனின் வாதங்களை ஆமோதித்து செவிமடுத்துக் கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தமிழ் கட்சிகளிற்கிடையிலான சந்திப்பு 27ஆம் திகதிக்கு தள்ளிவைப்பு!

Pagetamil

தரம் 5 புலமைப்பரிசில் முடிவுகளும், வெட்டுப்புள்ளியும் வெளியீடு!

Pagetamil

அட்டகாசத்தில் ஈடுபட்ட அர்ச்சுனாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

3 மணித்தியால இழுபறியின் பின் இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்தம் அமுலாகியது!

Pagetamil

அனுரவின் சீனப்பயணம்: 10 பில்லியன் டொலர் மதிப்பு முதலீடுகள் இலங்கைக்கு கிடைக்கும் வாய்ப்பு!

Pagetamil

Leave a Comment