கணவர் ஆணவக் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரின் மனைவி திடீரென தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை பள்ளிக்கரணை அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் பிரவீன் (26). மெக்கானிக். இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பள்ளிக்கரணையை அடுத்த ஜல்லடையாம்பேட்டை கணேஷ் நகரைச் சேர்ந்த ஷர்மிளாவை (22) காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு ஷர்மிளா வீட்டில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
இந்தநிலையில் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி இரவு 8:30 மணியளவில் பள்ளிக்கரணை பகுதியில் உள்ள தனியார் மதுபான விடுதியில் பிரவீன் 5 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து பள்ளிக்காரணை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பிரவீன், ஆணவக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அவரைக் கொலை செய்த குற்றத்துக்காக ஷர்மிளாவின் சகோதரரான ஜல்லடையம்பேட்டை முதல் பிரதான சாலை பகுதியைச் சேர்ந்த தினேஷ் (23) மற்றும் அவரின் நண்பர்கள் சித்தலப்பாக்கத்தைச் சேர்ந்த விஷ்ணு ராஜ்( 25), ஸ்ரீபன் குமார் (24), பள்ளிக்கரணையைச் சேர்ந்த ஸ்ரீ ராம் (18), ஜோதிலிங்கம் (25) ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கைதான ஷர்மிளாவின் சகோதரர் தினேஷிடம் போலீஸார் விசாரித்தபோது, என்னுடைய தங்கை வீட்டின் எதிர்ப்பை மீறி பிரவீனை திருமணம் செய்து கொண்ட சம்பவத்தில் பழி வாங்குவதற்காக கொலை செய்தது தெரியவந்தது.
இந்த நிலையில் தன்னுடைய கணவர் பிரவீனை ஆணவ படுகொலை செய்ய காரணமாக இருந்த தன்னுடைய பெற்றோர் மற்றும் இன்னொரு சகோதரர் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை என ஷர்மிளா கூறி வந்தார். அதோடு பிரவீன் கொலை செய்யப்பட்ட பிறகு ஷர்மிளா மிகவும் மனவேதனையிலும் இருந்து வந்திருக்கிறார். இந்தநிலையில்தான் கடந்த 14-ம் தேதி அம்பேத்கர் நகரில் உள்ள தன்னுடைய வீட்டில் ஷர்மிளா தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார். அதைக் கண்ட ஷர்மிளாவின் மாமனார், மாமியார் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த தற்கொலை முயற்சியில் ஷர்மிளாவின் கழுத்துப்பகுதியில் இருந்த எலும்பு மற்றும் நரம்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அதற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதோடு ஷர்மிளா தன்னுடைய சுயநினைவயும் இழந்ததாக தெரிகிறது. இதையடுத்து மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு ஷர்மிளா கொண்டு செல்லப்பட்டார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி ஷர்மிளா உயிரிழந்தார்.
இதுகுறித்தும் பள்ளிக்காரணை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீசார் ஷர்மிளாவின் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது ஷர்மிளாவின் டைரியை கைப்பற்றினர். இதில் ஷர்மிளா இறப்பதற்கு முன் தான் கைப்பட எழுதிய உருக்கமான கடிதம் கிடைத்தது.
அதில், ‘என்னால் என் கணவர் பிரவீன் இல்லாமல் இருக்க முடியல. நான் சாகப் போறேன். என் சாவிற்கு காரணம் தந்தை துரைக்குமார், தாய் சரளா, சகோதரர்கள் நரேஷ், தினேஷ் ஆகியோர் தான். பிரவீனை சாகடிச்சு என்கிட்ட இருந்து பிரிச்சுட்டாங்க. எங்களை வாழ விடாம பண்ணிட்டாங்க. அவன் இல்லாத இந்த வாழ்க்கை எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்’ என உருக்கமாக அந்த கடிதத்தில் எழுதி இருந்தது.