தியத்தலாவை ’28வது Fox Hill Super Cross – 2024′ கார்ப் பந்தயத்தில் இடம்பெற்ற விபத்தில் 7 பேர் உயிரிழந்து 19 பேர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு வாகன சாரதிகளையும் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் பீட்டர் பால் நேற்று (22) உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள தியத்தலாவ பொலிஸார் இருவரையும் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர். இலக்கம் 5 இன் கீழ் போட்டியிட்ட மாத்தறை மத்திய வீதியின் ஹித்தெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான சாரதி ஒருவரும், இலக்கம் 196 இன் கீழ் போட்டியிட்ட பேராதனை மகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதான சாரதி ஒருவருமே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்தில் இவ்விபத்தில் இரு சாரதிகளும் காயமடைந்துள்ளதுடன், தியத்தலாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளையில் தியத்தலாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் வைத்தியசாலையில் இருந்தபோதே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்தப் பந்தயத்தில் கார் ஒன்று விபத்துக்குள்ளாகி தண்டவாளத்தின் ஓரத்தில் நின்றபோது ஓடிக்கொண்டிருந்த கார் ஒன்று வாகனத்தின் மீது மோதி பார்வையாளர்கள் கூட்டம் இருந்த இடத்தில் விழுந்தது. அதிக தூசி காரணமாக சாரதிக்கு பாதையை பார்க்க முடியவில்லை எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 8 வயது சிறுமியும் அடங்குவதுடன், சிறுமியின் 65 வயதுடைய தாத்தாவும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
ஆபத்தான நிலையில் இருந்த மூன்று யுவதிகளும், இளைஞனும் பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், மூன்று பெண்களும் 12 ஆண்களும் தற்போது தியத்தலாவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
முத்துசாமி உதயகுமார் (65) கீழ்த்தொகுதி, டயராபவத்தை, வெலிமடை, சிவ குமார் தினுஷிக (08), கீழ்த் தொகுதி, டயராபவத்தை, வெலிமடை, சமத் நிரோஷன் (19), இல. 186, ராஜபக்சபுர, சீதுவ, ரசிக அபேநாயக்க (32) இராணுவ சிப்பாய், இல. 618, தல்துவ, அவிசாவளை, அருண சாந்த உபாலிகமகே (72), இலக்கம் 121, ராகுலபர, மாத்தறை, அசென் ஹெயினடிகல (20), இல. 821/10 ஏ, தரங்க வளவத்த, அக்குரஸ்ஸ, கணேஷ் ஜயவர்தன (60), இல. 116/01, அக்குரஸ்ஸ வீதி, கொடகம, மாத்தறை ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் இராணுவ சிப்பாய் கொஸ்கம சாலாவ முகாமில் கடமையாற்றியதாகவும், விடுமுறையில் இந்த போட்டியை பார்வையிட சென்ற போது விபத்துக்குள்ளானதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ராஜித உலுவிட்ட (31), டபிள்யூ.எம்.புபுது (30), ஈ.என்.ஏ டிலான் (25), என். நிரோஷன் (35), டிலான் அதிகாரி (47), எல்.என். தனுஸ்க லியாடிபிட்டிய (45), அசித்த ஹப்புஆராச்சி (26), கமல் ஸ்ரீ ரங்கம் (27), ஏ. கிரிசாந்த (42), சாமிக சதுரங்க (27), பி.பி.என். சமிந்த (26) – கேடட் அதிகாரி, டபிள்யூ.நடிகா தில்ஹானி (29), அசினி செவ்வந்தி (18), இரேஷா மதுஷானி (31), கே.ஏ. அனுத்தாரா தேவிந்தி (19), ஆர்.எம். ரணசிங்க (37), எம். விஜேகுமார (35), உதித உமேஸ் (22), எம். இதில் தாரிந்தி (16) ஆகியோர் படுகாயம் அடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் இராணுவ அகாடமியில் பயிற்சி பெற்று வரும் கெடட் அதிகாரியும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பண்டாரவளை பதில் நீதவான் திரு.செனவிரத்ன வீரசிங்க நேற்று முன்தினம் (21) பிற்பகல் விபத்து இடம்பெற்ற இடத்திற்குச் சென்று சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டார். பின்னர் நீதவான் தியத்தலாவை ஆதார வைத்தியசாலைக்கு வந்து வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள சடலம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டார்.
இந்த சடலங்களை தியத்தலாவ ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியால் பிரேத பரிசோதனை செய்து மருத்துவ அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பண்டாரவளை பதில் நீதவான் திரு.செனவிரத்ன வீரசிங்க பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.